இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியின்போது பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது.
நியூயோர்க்கில் இரத்தக்களறி ஏற்படலாம் என சுவரொட்டி ஒன்று வெளியானதை அடுத்து பயங்கரவாதத் தாக்குதல் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
ISISக்கு ஆதரவான குழுவினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட ஒரு வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு முகமூடி அணிந்த மனிதன் தோளில் துப்பாக்கியுடன் இருப்பதைக் காட்டுகிறது.
‘நீங்கள் போட்டிக்காக காத்திருங்கள்…’ என குறிப்பிடப்பட்டுள்ள அந்த வரைபடத்தில் தொடர்ந்து ‘நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம்…’ என இரத்தச் சிவப்பில் எழுதப்பட்டுள்ளது.
அந்த சுவரொட்டியில், நசவ் விளையாட்டரங்கில் ஜூன் 9ஆம் திகதி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்றைய தினம் தான் கிரிக்கெட் பரம வைரிகள் இந்தியாவும் பாகிஸ்தானும் அந்த மைதானத்தில் ஏ குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.
அந்த சுவரொட்டியில், மைதானத்தின் மீது பறக்கும் ட்ரோன்கள், டைனமைட் குச்சியுடன் நேரத்தை கணிப்பிடும் கடிகாரம் என்பனவும் காணப்படுகிறது.
ஆனால், தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் தொடர்பாக ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கை மட்டத்தை அதிகரிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
‘போட்டியின்போது ஒவ்வொருவரினதும் உயிர்பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுப்பது எமது தலையாக கடமையாக இருக்கும். அத்துடன் எங்களிடம் மிகவும் விரிவான மற்றும் வலுவான பாதுகாப்பு திட்டம் இருக்கிறது’ என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
‘போட்டிகளை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடுகளில் உள்ள அதிகாரிகளுடன் நாங்கள் மிக நெருக்கமாக பணியாற்றிவருகிறோம். போட்டிகளின்போது அடையாளம் காணப்பட்ட ஏதேனும் ஆபத்துகளைத் தணிக்க பொருத்தமான திட்டங்கள் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து மதிப்பீடு செய்துவருகிறோம்’ என அவர் கூறினார்.
தாக்குதல்களை இஸ்லாமிய அரசு ஊக்குவித்ததாக முன்னர் செய்திகள் வெளியானபோதிலும், போட்டியின்போது பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படும் என அஞ்சத் தேவையில்லை என சர்வதேச கிரிக்கெட் பேரவை முன்னர் தெரிவித்திருந்தது.
இஸ்லாமிய அரசிடம் இருந்து அச்சுறுத்தல் வெளிப்பட்டது என்பதை ஐ.சி.சி.யும் கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸும் (மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை) உறுதிப்படுத்தவில்லை. ஆனால், அதன் பிரசார சேவையான நஷிர்-இ பாகிஸ்தான், விளையாட்டு நிகழ்வுகள் மீதான தாக்குதல்களை ஊக்குவிப்பதாக கூறப்படுகிறது.
ஒன்பதாவது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை (இலங்கை நேரப்படி ஜூன் 2 – 30) ஐக்கிய அமரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் மொத்தம் ஒன்பது இடங்களில் நடைபெறவுள்ளது.