நியூஸிலாந்தில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கெதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 107 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியைக் காட்டிலும் விளையாட்டின் உன்னதத்தை வெளிப்படுத்தும் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஒரு பக்கம் இந்தியா – பாகிஸ்தான் அரசியல் பிரச்சினைகள் நிலவிவந்தாலும், அவை விளையாட்டு மற்றும் மனித உணர்வுக்கும் சம்பந்தமில்லை என்பதை இந்திய மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனைகள் நிரூபித்துள்ளனர்.
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணித்தலைவியான பிஸ்மா மஹ்ரூப் தனது 6 மாத குழந்தையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு காண்பித்து மகிழ்ச்சியடைந்தார். இதன்போது, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரும் 6 மாத குழந்தையான பாத்திமாவுடன் செல்லம் கொஞ்சி விளையாடி அன்பைப் பரிமாறிக் கொண்டதுடன், செல்பியும் எடுத்துக்கொண்டனர்.
இந்த காட்சி எல்லோரையும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களை பெற்றது.பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி 43 ஓவர்களில் 137 ஓட்டங்களுக்கு சுருண்டு 107 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]