இந்தியா நமக்கு வழங்கிய நிவாரண பொருட்களில் அரிசி மட்டுமே எங்களுக்கு கிடைத்துள்ளது. ஏனைய பொருட்கள் எங்கே என்ற கேள்வியை பலரும் முன்வைக்கின்றனர். இதனை அதிகாரத்தில் உள்ள வேறு யாரோ திருடிவிட்டது போலவும் சிலர் கதை கூறுகின்றனர். உண்மையில் இந்தியா கொடுத்தது என்ன? சீனி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் சிலரால் கொள்ளையிடப்பட்டதாக கூறுவது உண்மையா.. வாருங்கள் பார்ப்போம்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் நாட்டுமக்கள் சிக்குண்டு பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகின்றனர். ஒரு வேலை உணவே கனவாகும் அபாய நிலையில் இருக்கும் நாட்டு மக்களுக்கு இந்தியா செய்துவரும் உதவிகள் காலத்தால் சிறந்தவை.இந்தியாவின் உதவிகள் கூட பலரால் விமர்சிக்கப்படதான் செய்கின்றது. ஆனால் விமர்சனங்களை தாண்டி மக்களின் வயிறு நிறைவதை நாம் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.
இந்தியா நமக்கு தொப்புள் கொடி உறவு என்பதால் அது நமக்கு உதவி செய்ய வேண்டிய தார்மீக கடமை இருப்பதனால் தொடர்ந்து உதவி வருகின்றது. உண்மையில் இந்தியா மட்டுமே உதவி கரம் நீட்டியுள்ளது என்றே கூற வேண்டும். இந்நிலையில் தமிழர்களின் தாய்வீடான தமிழகத்தில் இருந்து இலங்கை வாழ் தமிழர்களுக்கு பல்வேறு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த மே மாதம் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கான தீர்மானம் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதோடு மத்திய அரசின் அனுமதியும் கிடைத்தது. 80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் தொன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான 137 மருந்து பொருட்கள் ரூ.15 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கு வழங்க 500 தொன் பால் மா பவுடர் ஆகியவற்றை இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் அனுப்பி வைப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வந்தார்.
அதற்கிணங்க கடந்த மே 18 ஆம் திகதி தமிழக முதல்வர் முக.ஸ்டாலினால் சென்னை துறைமுகத்தில் இருந்து தமிழக மக்களின் சார்பாக கப்பலில் நிவாரண பொருட்கள் முதல்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழகத்தில் இருந்து முதல் கட்டமாக ரூ.8.87 கோடி மதிப்பிலான நிவாரண பொருள்கள், அத்தியாவசிய பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது.
அதாவது , 9 ஆயிரத்து 500 தொன் அரிசி, 200 தொன் பால்மா பவுடர், 30 தொன் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் ரூ.128 கோடி மதிப்பிலான நிவாரண பொருள்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சென்னை துறைமுகத்திலிருந்து கப்பலில் அரிசி மற்றும் மருந்து வகைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிவாரண பொதிகளில் ‘தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்’ என்று அச்சிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை மக்களுக்கு இரண்டாம் கட்டமாக இந்திய மதிப்பில் ₹67.70 கோடி மதிப்பிலான 15,000 மெட்ரிக் தொன் அத்தியாவசியப் பொருட்கள் தற்போது தூத்துக்குடி தறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிவாரண பொருட்கள் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்ற நிலையில் நிவாரணங்கள் வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் பலரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் முறைகேடாக வழங்கப்படுவதாக தெரிவித்து அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சனசமூக நிலையத்துக்கு முன்னால் கடந்த சில நாட்களுக்கு முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனை ஊடகங்கள் வாயிலாக அறிய கிடைத்தது.
தோட்டத்தில் 200 குடும்பங்கள் இருந்தபோதும் வேலை செய்யும் 110 குடும்பங்களுக்கு மாத்திரம் 10 கிலோ கொண்ட அரிசி பொதி கடந்த 22ஆம் திகதி தோட்ட நிர்வாகத்தால் வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில் அனைத்து மக்களுக்கும் இந்த நிவாரண பொருட்கள் வழங்க வேண்டுமென தெரிவித்து, தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
தோட்ட உதவி முகாமையாளர் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்குவதாக தொழிலாளர்களுக்கு அறிவித்தனர். அதனை தொடர்ந்து இதனைப் பெற்றுக் கொள்வதற்காக தொழிலாளர்கள் வந்தபோது 110 குடும்பங்களுக்கு மாத்திரம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்ததை அடுத்து தோட்ட அதிகாரிக்கும் மக்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.
அத்தோடு நிவாரணம் கொடுத்தால் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இது தேவையில்லை என மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து தோட்ட அதிகாரிகள் அரிசி வழங்கும் நிலையத்தை மூடி சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அரிசி வைத்திருந்த களஞ்சியசாலையை முற்றுகையிட்டனர் .
அதேவேளை கல்மதுரை, ஆகரல்பெத்த, மோர்சன் ஆகிய தோட்டத்திற்கு வழங்கப்பட இருந்த அரிசியையும் வாகனத்தில் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இது போல பல சம்பவங்கள் நிவாரண பொருட்கள் வழங்களின் போது இடம்பெற்று வருகின்றன.
மேலும் தமிழகத்திலிருந்து அரிசி மட்டும் இல்லாது சீனி , கோதுமை மாவு, பருப்பு உள்ளிட்ட மேலும் பல பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தங்களுக்கு அரிசி மட்டுமே கிடைத்ததாகவும் சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஏன் தங்களுக்கு எனைய பொருட்கள் கொடுக்கப்படவில்லை. தமிழக அரசு கொடுத்தது எங்கே என்ற கேள்விகளையும் பலர் முன்வைக்கின்றனர். ஆனால் உண்மையில் இவையெல்லாம் தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்டதா?, என்றால் பதில் இல்லை என்று கூற வேண்டும்.
ஆம் தமிழகத்தில் இருந்து கிடைத்தது அரிசி மருந்து பொருட்கள் மற்றும் பால் மா மட்டுமே. ஆனால் பருப்பு சீனி கிடைத்ததாக கூறுவதெல்லாம் வெறும் வதந்தியே.
மேலும் அரிசி மட்டுமே எல்லோருக்கும் கிடைப்பதாகவும் பால்மா கிடைப்பதில்லை என்றும் கூறுகின்றனர். அது குழந்தைகளுக்கானது என கூறப்படுகின்றது. ஆனால் தற்போது தூத்துகுடியில் இருந்து வரும் கப்பலில் ஆவின் பால்மா அனுப்ப படுகின்றது. இது எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்படலாம்.
நமக்கு நிவாரண பொருட்கள் கிடைப்பதே பெரிய விடயம்தான். இதில் அனுப்படாத பொருட்கள் அனைத்தையும் யாரோ கொள்ளையடித்துவிட்டனர் எங்களுக்கு பருப்பு சீனி கிடைக்கவில்லை என்று கட்டுகதைகளை பரப்புவதை நிறுத்துவோம். நிவாரண பொருட்கள் மேலும் ஒரு கப்பலில் வந்துள்ளது.
எனவே இது அனைவருக்கும் நிச்சயம் பகிர்ந்தளிக்கப்படும் என நம்புவோம். நிவாரணங்களை திருடும் வேலைகளில் எந்த அதிகாரியும் ஈடுபட்டு விட கூடாது. மனசாட்சியுடன் உரியவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அத்தோடு இந்த உதவியை செய்துள்ள தமிழக முதல்வருக்கு மனதார நன்றிகளையும் தெரிவிப்போம்.