வெளிநாடு வாழ் இந்தியர்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் வலுவான இணைப்பை ஏற்படுத்தும் அடித்தளமாக இருக்கின்றனர்” என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு (ஏசியான்) உடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தாய்லாந்து, இந்தோனேஷிய பயணங்களை முடித்து விட்ட அவர், நேற்று முன்தினம் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் நடந்த ஏசியான்- வெளிநாடு வாழ் இந்தியர் தினம் மாநாட்டில் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்றார். இந்த மாநாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர். மாநாட்டில் அமைச்சர் சுஷ்மா பேசியதாவது: ஏசியான் உடனான நமது பங்களிப்பை மீண்டும் உறுதிபடுத்துகிறோம். உலகளவில் இந்தியா மற்றும் ஏசியான் எதிர்காலத்தை முன்னெடுத்து செல்வதிலும், வலிமையான உறவை ஏற்படுத்துவதற்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அடித்தளமாக இருக்கின்றனர். ஆசியான் பிராந்தியத்துடனான இந்தியாவின் ஈடுபாடு, நாம் பகிர்ந்து கொள்ளும் கொள்கைகளின் தெளிவில் உள்ளது. அனைத்து நாடுகளும் சர்வதேச விதிகள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடிக்கும்போது, அது இறையாண்மை, சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் நடக்கும் என நம்புகிறோம்.இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்போது, ஏசியான் உடனான அதன் உறவும் வலுப்படும். அதன் வர்த்தகம் மற்றும் முதலீடும் அதிகரிக்கும். இப்போது நாம், தொழில்துறை காலத்தில் இருந்து தகவல் காலத்திற்கு மாறி வருகிறோம். உலகளாவிய சக்தி சமநிலை நகர்ந்து வருகிறது. நாடுகளுக்கு இடையேயான உறவு மாறுகிறது. ஆனால், வரலாற்றின் தீர்க்கப்படாத கேள்வி இன்னும் நம்மை பிரிக்கிறது. அதே நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம் மற்றும் வாய்ப்புகளையும் காண்கிறோம். இதுதான் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா தங்களது நாட்டு மக்களின் வளமை புதிய தலைமுறையினரின் அமைதியான எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக பணியாற்ற வேண்டிய சரியான தருணமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.