பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நேற்று நடந்த விறுவிறுப்பான பைனலில், சுனில் ரமேஷ், கேப்டன் அஜய் அரைசதம் கடந்து கைகொடுக்க, 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), பார்வையற்றோருக்கான 5வது உலக கோப்பை கிரிக்கெட் (40 ஓவர்) தொடர் நடந்தது. நேற்று, சார்ஜாவில் நடந்த பைனலில், ‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணி, 2 முறை கோப்பை வென்ற பாகிஸ்தான் அணியை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. முதலில் ‘பேட்டிங்’ செய்த பாகிஸ்தான் அணி, 40 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 308 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணிக்கு பதார் முனிர் (57), ரியாசத் கான் (48), கேப்டன் நிசார் அலி (47) கைகொடுத்தனர்.
சுனில் அபாரம்: சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி, 15 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. பின், 16வது ஓவரின் முடிவில் 3 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்திருந்தது. பின் இணைந்த சுனில் ரமேஷ், கேப்டன் அஜய் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. பாகிஸ்தான் பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் இருவரும் அரைசதம் கடந்தனர். இதனையடுத்து இந்திய அணி, 25 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அபாரமாக ஆடிய சுனில் ரமேஷ் (93) சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். அப்போது இந்திய அணி, 35 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாவது முறை: சிறிது நேரத்தில் கேப்டன் அஜய் (62) உட்பட 4 பேர் அவுட்டாக, போட்டியில் திருப்பம் ஏற்பட்டது. பின் வந்தவர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்திய அணி, 38.2 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 309 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனையடுத்து ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய இந்திய அணி, தொடர்ந்து 2வது முறையாக கோப்பை வென்றது. இதற்கு முன், 2014ல் தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரில் நடந்த பைனலில், இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இதனையடுத்து, பார்வையற்றோருக்கான உலக கோப்பை அரங்கில், அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில், முதலிடத்தை பாகிஸ்தானுடன் (2002, 2006) பகிர்ந்து கொண்டது இந்தியா (2014, 2018). இவ்விரு அணிகள் தலா 2 முறை கோப்பை வென்றன. தவிர இந்திய அணி, பாகிஸ்தானுக்கு பின், தொடர்ச்சியாக 2 முறை உலக கோப்பை வென்ற அணி என்ற பெருமை பெற்றது. ஒரு முறை தென் ஆப்ரிக்க அணி (1998, எதிர்: பாகிஸ்தான், இடம்: டில்லி, இந்தியா) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.