இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை முறைமுகத்திற்கு இன்று சனிக்கிழமை (14) முதல் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்குப் பின்னர் நாகப்பட்டினம் இலங்கை பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பலானது, 25 கோடி இந்திய ரூபா செலவில் கொச்சினில் தயாரிக்கப்பட்டதோடு மணித்தியாலத்திற்கு 36 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடியதாகும்.

இந்த பயணிகள் கப்பலுக்கு “செரியபாணி” என்ற பெயர் சூட்டப்பட்டது. அதில் முழுவதும் குளிரூட்டப்பட்ட இருக்கை வசதிகள் உள்ளன.
14 ஊழியர்கள் மற்றும் 150 பயணிகளுடன் பயணிக்கும் வசதிகளை கொண்ட குறித்த கப்பலில், பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான குறித் கப்பல் சேவையை இன்று காலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இணைய வழியாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதன்போது உரையாற்றிய இந்திப் பிரதமர் நரேந்திர மோடி,
இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையேயான கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்தியா – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்துக்காக இலங்கை மக்களுக்கு இந்திய பிரதமர் நன்றி கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கப்பல் சேவை இணைப்பை மேம்படுத்தவும், வர்த்தகத்தை மேம்படுத்தவும், நமது நாடுகளுக்கு இடையே உள்ள நீண்டகால பிணைப்புகளை வலுப்படுத்தவும் உதவும் என இந்திய பிரதமர் நரேந்திமோடி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல அவசர உதவி மையங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா சார்பல் இலங்கையில் பெரும்பாலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த முதலாவது பயணிகள் கப்பல் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 50 பயணிகளுடன் இன்றைய தினம் காலை 11.30 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளாந்தம் நாகப்பட்டினத்திலிருந்து காலை 7:00 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 11:30-12:00 மணிக்கு இலங்கையை வந்தடையும். அதேபோல், பிற்பகல் 1:30 மணிக்கு இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்தில் புறப்படும் கப்பல் இரவு 5:30 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்தை சென்றடையும்.
நாகாபட்டினத்துக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான 64 கடல் மைல்களைப் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழி கட்டணமாக 26,750 ரூபாவும் இருவழி கட்டணமாக 53,500 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.