இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. டெஸ்ட் தொடரையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து இன்று இரண்டாவது போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பை தெரிவு செய்ததையடுத்து நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய மார்டின் குப்தில் 2வது பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய அணித்தலைவர் வில்லியம்சன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டாம் லேதமுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
லேதம் 46 ஓட்டங்களும், வில்லியம்சன் சதம் கடந்து 118 ஓட்டங்களும் குவித்தனர். அடுத்து களமிறங்கிய ரோஸ் டெய்லர், ஆண்டர்சன் இருவரும் தலா 21 ஓட்டங்கள் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 242 ஓட்டங்கள் எடுத்தது.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் பும்ரா, அமித் மிஸ்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 243 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அதிகபட்சமாக கேதர் ஜாதவ் 41 ஓட்டங்களும், அணித்தலைவர் டோனி 39 ஓட்டங்களும், பாண்டியா 36 ஓட்டங்களும், ரஹானே 28 ஓட்டங்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் டிம் சவுத்தி 3 விக்கெட்டும், டிரெண்ட் பால்ட், மார்ட்டின் குப்தில் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.