இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதே புதிய அரசின் வெளிவிவகாரக் கொள்கை என வெளிவிவகார அமைச்சின் செயலாளரும் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியுமான ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், புதிய அரசின் வெளிவிவகார கொள்கை, இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் நலன்களை பாதுகாப்போம். அதாவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டோம் என்றும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும் இதே கொள்கையை பின்பற்றுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தங்கள் மண்ணில் பிற நாட்டுக்கு எதிரான, குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான எந்த காரியத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
உலக அளவில் சீனா இரண்டாவது பொருளாதார வல்லரசு நாடு என்றும் இந்தியா 6ஆவது பொருளாதார வல்லரசு நாடு என்றும் எனவே 2 பொருளாதார வல்லரசுகளுக்கிடையே இலங்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை முதலில் இந்தியாவுக்குத்தான் குத்தகைக்கு கொடுக்க முன்வந்ததாகவம் ஆனால், இந்தியா ஏற்காததால்தான் சீனாவுக்கு வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த துறைமுகத்தை சீனா வணிக காரியங்களுக்குத்தான் பயன்படுத்தும் என்பதோடு, இராணுவ செயற்பாடுகளுக்கு பயன்படுத்தாது என்றும் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தை இயக்குவது தொடர்பாக இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை தொழிற்சங்கங்களின் எதிர்ப்பை மீறி செயற்படுத்துவோம் என்றும் ஜயநாத் கொலம்பகே மேலும் கூறியுள்ளார்.