டோக்லாம் பகுதியில் ராணுவ வீரர்கள் நலனுக்காக கட்டப்படும் கட்டடம் சட்டபூர்வமானது என்று சீனா நியாயப்படுத்துகிறது. இந்திய, சீனா எல்லையில் சிக்கிம் அருகேயுள்ள டோக்லாமில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட சீன ராணுவத்தை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது.
சமீபத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் டோக்லாம் எல்லை தொடர்பாக சீனா மற்றும் பூடான் இடையே பிரச்னை இருப்பதாக’ குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், டோக்லாமில் இந்தியா தடுத்து நிறுத்திய பகுதியில் ராணுவம் சார்ந்த கட்டுமான பணிகளை சீனா செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பான செயற்கைகோள் படத்தை மேற்கோள்காட்டி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லூ காங் கூறியதாவது: இந்த புகைப்படங்களை யார் வெளியிட்டனர் என தெரியவில்லை. இது தொடர்பான முழு விபரம் என்னிடம் இல்லை.
ஆனாலும், டோக்லாம் மீதான சீனாவின் நிலைப்பாடு மிகத்தெளிவாக உள்ளது. டோக்லாம் எப்போதும் சீனாவுக்கு சொந்தமானது. இது எங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்டது.
இதில் சர்ச்சை என்ற பேச்சுக்கு இடமில்லை. சீனாவின் அதிகாரத்திற்கு உட்பட்ட டோக்லாம் பகுதியில் கட்டப்படும் கட்டடங்கள் அனைத்து சட்டபூர்வமாக சரியானது.
நியாயமானதும் கூட. இங்கு கட்டப்படும் கட்டுமான பணிகள் அனைத்தும் சீனாவில் வாழும் மக்களின் ேமம்பாடு மற்றும் சீனா ராணுவத்தினர் நலனுக்கானது.
எல்லையில் ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் மற்றும் எல்லையில் வசிக்கும் பொதுமக்களின் வாழ்க்கை பாதுகாப்புக்காக டோக்லாமில் சாலை வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை சீனா அமைத்து வருகிறது. இந்திய எல்லைப்பகுதிக்குள் கட்டப்படும் உள்கட்டமைப்புகள் பற்றி சீனா கேள்வி எழுப்ப முடியாது.
அதேபோல் மற்ற நாடுகளும் சீன எல்லைப்பகுதிக்குள் நடைபெறும் கட்டுமான பணிகள் குறித்து கேள்வி எழுப்பமாட்டார்கள் என நம்புகிறோம். இந்திய ராணுவ அதிகாரி தெரிவித்த டோக்லாம் பற்றிய கருத்து இந்தியா, சீனா இடையேயான இரு தரப்பு உறவை தீவிர ேசாதனைக்கு உட்படுத்தியுள்ளது.
எனவே இதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இது போன்ற பிரச்னையை இந்தியா மீண்டும் எழுப்பாது என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.