இந்தியாவுக்குள் தாம், தமக்கான இடமொன்றை ஸ்தாபித்துக் கொண்டதாக, இஸ்லாமிய அரசு என்ற பெயரில் இயங்கும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.
பிரிவினைவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் இடையில், காஷ்மிர் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலொன்றைத் தொடர்ந்தே, தாம் தமக்கான இடமொன்றை ஸ்தாபித்ததாக, அவ்வமைப்பு அறிவித்துள்ளது.
இந்த மோதலின் போது, ஐ.எஸ் அமைப்பு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும், அவ்வமைப்பின் அமாக் செய்திச் சேவை, நேற்றைய தினம் (10), செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ள ஐ.எஸ் அமைப்பு, இந்தியாவில் தாம் ஸ்தாபித்த இடத்துக்கு, ‘விலாயஹ் ஒஃப் ஹிந்த்’ எனப் பெயரிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
காஷ்மிரின் ஷொப்பியான் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ஷிபோரா நகரிலேயே, இஸ்லாமியப் பிரிவினைவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதில், தமது அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் காயமடைந்ததாக, ஐ.எஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த மோதலில், இஷாக் அஹ்மட் சோஃபி என்ற தமது போராளி உயிரிழந்ததாக அவ்வமைப்பு அறிவித்துள்ள அதேவேளை, இதனை, இந்தியப் பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பைத் தம்வசம் கொண்டிருந்த ஐ.எஸ் அமைப்பு, ஈராக் மற்றும் சிரியாவில், கலீஃபா ஒன்றையும் அறிவித்திருந்தது. எவ்வாறாயினும், அந்தப் பூமிப் பிரதேசத்தை, கடந்த பெப்ரவரி மாதத்தில், அவ்வமைப்பு இழந்து, பாரிய தோல்வியமைடந்தது.
அந்தத் தோல்வியைத் தொடர்ந்தே, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் போன்ற பாரிய தாக்குதல்களை நடத்தி, தமது பலத்தைக் காண்பித்து வருகின்றனர். இலங்கையில் அவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பையும், அவ்வமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.