இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டு வேகமாக பரவி வந்த டெல்டா வகையினதான கொரோனா வைரஸ் கிருமி, தற்போது டெல்டா பிளஸ் வகையினதாக உருமாற்றம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கிருமிகளான ‘கப்பா’ மற்றும் ‘டெல்டா’ ஆகியவற்றின் பரவல் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக காணப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
குறிப்பாக டெல்டா வகையினதான உருமாறிய கொரோனா பரவல் அதிகளவில் காணப்பட்டதாக அரசு சார்பில் அமைக்கப்பட்ட பத்து தேசிய ஆய்வகங்களை உள்ளடக்கிய குழு தெரிவித்தது. இந்த நிலையில் அதிக பரவல் வீரியம் கொண்ட டெல்டா வகை கொரோனா வைரஸ் தற்போது டெல்டா பிளஸ் வகையினதாக உருமாற்றம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விஞ்ஞானி வினோத் ஸ்கேரியா தனது சுட்டுரையில் பதிவிட்டிருப்பதாவது…
டெல்டா வகை கொரோனா புதிய உருமாறிய வகையாக உருமாற்றம் பெற்றிருக்கிறது. அது K.417.N உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா பி.1.617.2.1 அல்லது AY.1 என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்பைக் புரதத்தில் இடம்பெற்றிருக்கும் உருமாறிய கொரோனா வைரஸ், மனித உடலுக்குள் நுழைந்து திசுக்களை சேதப்படுத்துகின்றன.’ என பதிவிட்டிருக்கிறார்.
லண்டன் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி,’ இந்த டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் ஜூன் 7ஆம் திகதி வரையிலான நிலவரப்படி இந்தியாவில் அதிக அளவில் பரவவில்லை. பெரும்பாலும் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்க பகுதிகளிலேயே இந்த வகையான உருமாற்றம் காணப்படுகிறது’ என குறிப்பிட்டிருக்கிறது.
‘இந்த உருமாற்றம் பெற்ற டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் எந்த அளவிற்கு வேகமாக பரவுகிறது என்பதை அவதானித்த பிறகே அதன் பாதிப்பை கணக்கிட முடியும். எனவே தற்போதைய சூழலில் இது கவலை அளிக்கும் விடயமாக கருத வேண்டாம்’ என புனேவைச் சேர்ந்த விஞ்ஞானி வினித் பால் குறிப்பிடுகிறார்.
இருப்பினும் இந்தியா முழுவதும் புதிய உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்களிடையே அச்சம் எழுந்திருக்கிறது.