தென்சென்னை தொகுதியின் மக்களவை உறுப்பினர், தமிழச்சி தங்கபாண்டியன் இந்தியாவில் பிறந்த இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு இந்திய கடவுச்சீட்டு வழங்கப்படுமா? என நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பிள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ம் தேதி தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக தென்சென்னை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன்,
“இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டு இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்த பல்லாயிரக் கணக்கானோர் அகதிகளாக பல்வேறு அகதிகள் முகாமில் உள்ளனர்.
கடந்த 1980களில் கருப்பு ஜூலையின் போது, இலங்கையில் இருந்து வந்து திருச்சி அகதிகள் முகாமில் உள்ள கே.நளினி என்பவருக்கு உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு இதற்கு முன்னர் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதா? இனிமேல் வழங்கும் திட்டம் ஏதேனும் உள்ளதா?” என மத்திய வெளியுறவுத்துறைக்கு தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வீ.முரளீதரன், இந்த விவகாரம் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனை பின்னர் சந்தித்து விரிவாக ஆலோசனை செய்வதாக மக்களவையில் உறுதியளித்துள்ளார்.