இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் குறைந்தது 132 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார்.
நேற்று (30) மாலை தொங்கு பாலம் அறுந்ததால் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கினர்.
அந்த நேரத்தில் 400 பேர் குறித்த தொங்கு பாலத்தில் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலம் பழுதுபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்ட சில நாட்களில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோர்பியில் வரலாற்று சின்னமாக பார்க்கப்பட்ட 765 அடி நீளம் கொண்ட இந்த தொங்கு பாலம், 1879 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டது.
144 ஆண்டுகள் பழையான பாலத்தில் தனியார் நிறுவனம் ஒன்று சமீபத்தில் பழுது பார்க்கும் பணியையும், புதுப்பிக்கும் பணியையும் மேற்கொண்டது.
இம் மாதம் ( அக்டோபர் 26 ) அன்று குஜராத் புத்தாண்டின் போது மக்கள் பயன்பாட்டுக்கு குறித்த பாலம் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் தற்போது அறுந்து விழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மாநில அரசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 இலட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவும் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்திய பிரதமர் மோடியும், உயிரிழந்தவர்களுக்கு 2 இலட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.