தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் அண்மைக்காலமாக ‘தக்காளி காய்ச்சல்’ என்ற பெயரில் 12 வயதுக்குட்பட்ட சிறார்களை காய்ச்சல் ஒன்று தாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இது குறித்து வைத்திய நிபுணர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.
‘தக்காளி காய்ச்சல்’ அல்லது ‘தக்காளி ஜுரம்’ எனப்படும் இந்த காய்ச்சலுக்கும், தக்காளி என்ற உணவு பொருட்களுக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை.
அதேபோல் தக்காளி காய்ச்சல் என்பது புது வகையான காய்ச்சலும் இல்லை. இது ஒருவகையான வைரஸால் ஏற்படும் பாதிப்பு.
இதனை வைத்திய மொழியில் ஹேண்ட் ஃபூட் மவுத் டிஸீஸ் என குறிப்பிடுவதுண்டு.
இத்தகைய பாதிப்பு ஏற்படும் போது கை கால் வலி, மூட்டுகளில் வலி, காய்ச்சல், கை, கால், முதுகு, உடல் ஆகிய பகுதிகளில் திட்டு திட்டாக சிவப்பு வண்ணத்தில் ராஷஸ் ஏற்படும். சிலருக்கு வாயில் புண் ஏற்படக் கூடும்.
இது ஆபத்தான நோயல்ல என்றாலும், மிக அரிதாக ஒரு சிலருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்.
ஐந்து முதல் ஏழு நாட்களுக்குப் பிறகு இந்த பாதிப்பு தானாக சரியாகிவிடும். அந்த கால கட்டங்களில் ஏதேனும் வலி, அரிப்பு ஏற்பட்டால், அதற்கு மருத்துவரின் ஆலோசனையுடன் நிவாரண சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
இத்தகைய வைரஸ் கிருமி காற்றில் பரவும் தன்மை கொண்டதால் தக்காளி காய்ச்சல் ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது நன்மை தரும்.
டொக்டர் கார்த்திகேயன்.
தொகுப்பு அனுஷா.