நாம் முதலில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் முதல் அலை ஏற்படுத்திய பாதிப்புகளை விட, இரண்டாவது அலை பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையின்போது அதிகபட்சமாக ஒரு நாள் பாதிப்பு 97000 என்ற அளவில் இருந்தது. அதன்பின்னர் படிப்படியாக குறைந்தது.
அதன்பின்னர் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி, கடந்த 6ம் தேதி அதிகபட்சமாக தினசரி தொற்று எண்ணிக்கை 4.14 லட்சமாக உயர்ந்தது. அதன்பின்னர் படிப்படியாக குறைந்து இப்போது 2 லட்சத்திற்கும் கீழ் உள்ளது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் தினசரி பாதிப்பு 1.65 லட்சம் என்ற அளவில் இருந்தது. இதுவும்கூட முதல் அலை உச்சத்தில் இருந்ததைவிட அதிகம்தான்.
இதைவிட கொரோனா வைரசின் மூன்றாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படலாம் என்றும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால், அடுத்த அலையை கணிக்க இயலாது என உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.
இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி, சுகாதார சேவைகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாட்டின் சில பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வருவதை பார்க்கிறோம். ஆனாலும், சூழ்நிலை தொடர்ந்து சவாலாகவே உள்ளது.
எனவே, நாம் முதலில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனாவின் அடுத்த அலையை நாம் கணிக்க முடியாது, ஆனால் அதைத் தடுக்க முடியும். அதை நாம் கட்டாயம் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
http://Facebook page / easy 24 news