ஜஸ்பிரித் பும்ராவின் அபாரமான யார்க்கர்களுக்கும், அவரது தாயின் தூக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை.
சிறு வயதில் கிரிக்கெட்டில், குறிப்பாக பந்து வீச்சில் ஆர்வம் கொண்டிருந்த பும்ராவுக்கு அவரது தாயார் தல்ஜீத் விதிக்கும் அன்புக் கட்டளைகள் இரண்டுதான். முதல் கட்டளை வீட்டுக்குள் விளையாட வேண்டும். 2-வது கட்டளை, விளையாட்டின்போது சத்தம் எழுப்பி தனது தூக்கத்தை கெடுக்கக் கூடாது. இந்த 2 கட்டளைகளையும் நிறைவேற்ற பும்ரா ஒரு வழியைக் கண்டுபிடித்தார். தன் வீட்டு ஹாலில் தரையும், சுவரும் இணையும் ஸ்கர்டிங் பகுதியில் குறிபார்த்து பந்துவீசு வதுதான் அந்த வழி. அப்படிச் செய்தால் ஒரே இடத்தில் குறிபார்த்து பந்து வீசும் பயிற்சி பெறுவதுடன் அதிக சத்தம் வராமலும் அவரால் ஆட முடிந்தது. அப்படி குறிபார்த்து பந்து வீசிப் பழகியதுதான் இன்று மிக நேர்த்தியாக பேட்ஸ்மேனின் கால் களுக்கு நெருக்கமாக யார்க்கர்களை வீச அவருக்கு உதவுகிறது. டி 20 போட்டி களுக்கான தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சில் முதல் இடம் பிடிக்கவும் உதவியுள்ளது.
பும்ராவின் தந்தையான ஜஸ்பீர் சிங் இளம் வயதிலேயே ஹெபடைடிஸ் பி நோயால் இறக்க, பும்ராவையும் அவரது சகோதரியையும் பள்ளி ஆசிரியையான தாயார் தல்ஜீத்தான் கஷ்டப்பட்டு வளர்த்துள்ளார். தன் மகன் படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று தாயார் ஆசைப்பட, பும்ராவோ கிரிக்கெட் மீது காதல் கொண்டவராக இருந்தார்.
14-வது வயதில் தான் ஒரு கிரிக்கெட் வீரராக விரும்புவதாக தாயாரிடம் கூறியுள்ளார் பும்ரா. ஆனால் கிரிக்கெட் விளையாடி தன் மகனால் ஒரு பெரிய ஆளாக வரமுடியுமா என்ற சந்தேகம் அவரது தாயாரின் மனதில் இருந்தது. தன் தயக்கத்தை பும்ராவிடம் கூற, “என்னை நம்புங்கள். நான் நிச்சயம் கிரிக்கெட் விளையாட்டில் சாதிப்பேன்” என்று உறுதியாக கூறியுள்ளார் பும்ரா. இதைத்தொடர்ந்து அரை மனதுடன் அவரை பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளார். அதே நேரத்தில் தனக்காக படிப்பிலும் கவனம் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார். அதிகாலையில் எழுந்து பயிற்சிக்கு சென்ற பும்ரா, அதன் பிறகு பள்ளிக்குச் சென்று படித்து, மாலையில் மீண்டும் கிரிக்கெட் பயிற்சிக்கு சென்று தன் கிரிக்கெட் ஆற்றலை கூர் தீட்டியுள்ளார். அதேநேரத்தில் படிப்பிலும் கெட்டிக்காரராக இருந்து தன் தாய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்றியுள்ளார்.
பும்ராவுக்கு சிறுவயதில் பயிற்சி கொடுத்தவரான கிஷோர் திரிவேதி, அவரைப் பற்றி கூறும்போது, “இளம் வயதிலேயே யார்க்கர்களை துல்லியமாக வீசும் ஆற்றல் பும்ராவுக்கு இருந்தது. அவன் ஆடுகளத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஒரு அடையாளத்தை வைத்து அந்த இடத்தில் துல்லியமாக பந்தை பிட்ச் ஆகச் செய்து வீசுவான். தொடர்ந்து 45 நிமிடங்கள் வரை இதேபோன்று ஓர் இடத்தில் பந்தை பிட்ச் செய்து பயிற்சி பெறுவான்” என்கிறார்.
இளவயதில் பயிற்சி பெற்றது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ள பும்ரா, “நெஹ்ரா, ஜாஹிர் கான், மிட்செல் ஜான்சன் ஆகியோர்தான் என் இளம் வயது ஹீரோக்கள். இவர்களில் யாராவது ஒருவர் குறிப்பிட்ட ஒரு ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்களை வீழ்த்தினால், உடனடியாக அடுத்த சில நாட்களுக்கு அதே போன்று பந்து வீசி பயிற்சி பெறுவேன். சில நாட்களுக்கு பிறகு என் அடுத்த ஹீரோ சாதிக்கும்போது, அவரது பாணியைக் கடைபிடித்து பயிற்சி மேற்கொள்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
யார்க்கர் பந்துகளை வீசும் பும்ராவின் ஆற்றல், குஜராத் கிரிக்கெட் சங்கம் நடத்திய பயிற்சி முகாமில் அவரைத் தேர்வுபெற வைத்துள்ளது. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி குஜராத் அணியில் கால் பதித்துள்ளார் பும்ரா. 2013-ம் ஆண்டு, சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகளில் இவர் பந்து வீசிய விதம் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளரான ஜான் ரைட்டை பெரிதும் கவர்ந்துள்ளது. உடனடியாக மும்பை இந்தியன்ஸ் அணியின் மேலாளரான ராகுல் சங்வியை அழைத்துள்ளார் ஜான் ரைட்ஸ். “அற்புதமான பந்து வீச்சாளர் ஒருவரைக் கண்டு பிடித்துவிட்டேன். உடனடியாக அவரை நம் மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்க நடவடிக்கை எடுங்கள்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ராவுக்கு இடம் கிடைத்துள்ளது.
அங்கே அவருக்கு மலிங்காவின் அறிமுகம் கிடைத்துள்ளது. ஏற்கெனவே யார்க்கர்களை வீசுவதில் வல்லவரான பும்ராவை, மலிங்கா மேலும் கூர்தீட்டினார். ஸ்டம்புக்கு முன் காலணியை வைத்து அதைக் குறிபார்த்து பந்துவீசும் தன் பயிற்சி முறையை பும்ராவுக்கு அவர் சொல்லிக் கொடுத்தார். இதனால் மேலும் வலுப்பெற்றார் பும்ரா. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆர்சிபி அணிக்கு எதிராக ஆடிய முதல் போட்டியிலேயே 32 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்களை பும்ரா கைப்பற்றியுள்ளார். அதில் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டும் ஒன்று. ஐபிஎல் கிரிக்கெட்டில் படைத்த சாதனைகள் அவரை இந்திய அணிக்கு விரைவாக அழைத்துச் சென்றது.
2016-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்தார் பும்ரா. முதல் போட்டியிலேயே 40 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்திய பும்ரா, அதன் பிறகு இந்தியாவின் யார்க்கர் எக்ஸ்பிரஸாக மாறி விக்கெட்களை அள்ளத் தொடங்கினார்.
28 ஒருநாள் போட்டிகளில் 52 விக்கெட்களை வீழ்த்திய அவர், குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்களை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் 28 டி20 போட்டிகளில் 38 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட்களை வீழ்த்துவதாலும், குறைந்த ரன்களை வழங்குவதாலும் டி 20 போட்டிக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியலில் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இந்த வாரம் இடம் பிடித்துள்ளார் பும்ரா. அத்துடன் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலிலும் 3-வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் போட்டிகளிலும் பும்ராவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கின்றன. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யும்போது அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் சாதிக்க பும்ராவை வாழ்த்துவோம்