இந்தியாவில், கிராமப்புறங்களில் வசிக்கும் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் 36 சதவிகிதம் பேர், இந்தியாவின் தலைநகரம் டெல்லி என்பதைக்கூட அறியாத நிலையில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில், ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி தொடர்பான வருடாந்திர நிலை அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இதற்காக, நாடுமுழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்படும். அந்த வகையில், 2017-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில், ஊரகப்பகுதிகளில் கல்வி உரிய அளவில் போய்ச் சேரவில்லை என்பதை அந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
ஏனெனில், கிராமப்புறங்களில் வசிக்கும் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 14 சதவிகிதம் பேருக்கு இந்தியாவின் வரைபடத்தையே அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை. 36 சதவிகிதம் பேருக்கு இந்தியாவின் தலைநகர் டெல்லி என்ற விவரம் தெரிந்திருக்கவில்லை. உங்கள் மாநிலம் எது? என்ற கேள்விக்கு 79 சதவிகிதம் பேர் சரியாகப் பதில் அளித்துள்ளனர். ஆனால், அவர்களில் 42 சதவிகிதம் பேருக்கு மாநிலத்தின் வரைபடத்தைப் புரிந்துகொள்ள இயவில்லை.
நாடுமுழுவதும் 24 மாநிலங்களிலுள்ள 28 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி இந்த விவரம் வெளியாகியிருக்கிறது.