டெல்லி, அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (09) இரவு கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சவாலை முறியடித்து 7 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா வெற்றி பெற்றது.
இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் தென் ஆபிரிக்கா முன்னிலை அடைந்துள்ளது.
இந்தியாவின் அதிரடி வீரர் இஷான் கிஷான் குவித்த அதிரடி அரைச் சதம், ரசி வென் டேர் டுசென், டேவிட் மில்லர் ஆகியோரின் அதிரடி அரைச் சதங்களால் வீண் போனது.
இந்திய அணியில் வழமையான அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகியோர் விளையாடவில்லை. அணித் தலைவராக ரிஷாப் பன்ட் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்தப் போட்டியில் இந்தியா 16 பவுண்டறிகள், 14 சிக்ஸ்களையும் தென் ஆபிரிக்கா 17 பவுண்டறிகள், 14 சிக்ஸ்களையும் விளாசியிருந்தன.
இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 212 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா, 19.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து குறிப்பிட்ட வெற்றி இலக்கை அடைந்தது.
இன்னிங்ஸ் ஆரம்பித்தது முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆபிரிக்கா, 8.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 84 ஓட்டங்களை குவித்திருந்தது.
அணித் தலைவர் டெம்பா பவுமா (10), ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ் (29), குவின்டன் டி கொக் (22) ஆகியோரே ஆட்டமிழந்த முதல் மூவர் ஆவர். ப்ரிட்டோரியஸ் 13 பந்துகளில் 4 சிக்ஸ்களையும் ஒரு பவுண்டறியையும் விளாசியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரசி வென் டேர் டுசென், டேவிட் மில்லர் ஆகிய இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்து பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 131 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவின் வெற்றியை உறுதிசெய்தனர்.
வென் டேர் டுசென் 46 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 75 ஓட்டங்களுடனும் டேவிட் மில்லர் 31 பந்துகளில் 5 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகள் அடங்கலாக 64 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைக் குவித்தது.
இஷான் கிஷான், ருத்துராஜ் கெய்க்வாட் (23) ஆகிய இருவரும் 38 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
தொடர்ந்து இஷான் கிஷானும் ஷ்ரேயாஸ் ஐயரும் 2ஆவது விக்கெட்டில் 40 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
இஷான் கிஷான் 48 பந்துகளில் 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 76 ஓட்டங்களைக் குவித்தார்.
ஷ்ரேயாஸ் ஐயர் 27 பந்துகளில் 36 ஓட்டங்களையும் ரிஷாப் பன்ட் 16 பந்துகளில் 29 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
ஹார்திக் பாண்டியா 12 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களைக் குவித்தார்.
தினேஷ் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.