உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி இதுவரை இந்தியாவை வீழ்த்தியதில்லை.
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப்-1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், சூப்பர்-12 சுற்றில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் மோதல் என்றாலே வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் உணர்ச்சி பிழம்பாகி விடுவார்கள். அதுவும் இது உலக கோப்பை என்பதால் அனல் பறக்கும்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவான நிலையில் உள்ளது. கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா என்று அதிரடி சூரர்களும், பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், ஜடேஜா, அஸ்வின், வருண் சக்ரவர்த்தி என்று திறமையான பந்து வீச்சு படையும் உள்ளது. நெருக்கடியின்றி சாதுர்யமாக விளையாடினால் போதும். வெற்றிக்கனியை பறித்து விடலாம். அத்துடன், ஆலோசகராக முன்னாள் கேப்டன் டோனி இருப்பது இன்னொரு பலமாகும். அவர் அணிக்கு நிறைய யோசனைகளை வழங்கியுள்ளார்.
எளிதில் கணிக்க முடியாத ஒரு அணி பாகிஸ்தான். உலக கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக இந்தியாவிடம் உதை வாங்கி வரும் பாகிஸ்தான் இந்த முறை அந்த சோகத்துக்கு முடிவு கட்டும் வேட்கையுடன் வியூகங்களை தீட்டி வருகிறது. கேப்டன் பாபர் அசாம், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், பஹார் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் முதுகெலும்பாக உள்ளனர். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் மிரட்டக்கூடியவர்கள்.
பாகிஸ்தான் அணி தங்களது உள்ளூர் போட்டிகளை பெரும்பாலும் அமீரகத்தில் தான் விளையாடுகிறது. இதனால் இங்குள்ள மைதானங்கள், சீதோஷ்ண நிலை நன்கு பழக்கப்பட்டது தான். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு இது சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் சரிசம பலத்துடன் இரு அணிகளும் மல்லுகட்டுவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை கணிப்பது கடினம்.
ஆனால் சாதனை வகையில் பார்த்தால் இந்தியாவின் கையே மேலோங்கி நிற்கிறது. 50 ஓவர் உலக கோப்பையில் 7 முறையும், 20 ஓவர் உலக கோப்பையில் 5 முறையும் இந்தியாவிடம் தோற்று இருக்கிறது.
ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 8 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7-ல் இந்தியாவும், ஒன்றில் பாகிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:
இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா,ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் அல்லது வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார் அல்லது ஷர்துல் தாக்குர்.
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), பஹார் ஜமான், முகமது ஹபீஸ் அல்லது ஹைதர் அலி, சோயிப் மாலிக், ஆசிப் அலி, ஹசன் அலி, ஷதப் கான், இமாத் வாசிம், ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப்.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]