அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த இசைநிகழ்ச்சி மற்றும் அதில் நடந்த அசம்பாவிதம் அது பற்றிய கதைகள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காகவா இரத்தம் சிந்தினோம் என்று நோகத் தோன்றுகிறது.
தயவு செய்து இதில் யாழ்ப்பாணத்தையோ, யாழ் இளைஞர்களையோ குறை சொல்ல வேண்டாம். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் செய்த தவறினால் ஏற்பட்ட குழப்பமே இது.
அத்துடன் படம் எடுக்க முப்பதாயிரம் ரூபாய் என்று மலினமான வியாபாரம் பேசியமையும் நிகழ்வில் பொலிஸார் கடமை செய்யத் தவறி அதனால் சிக்கல்கள் எழுந்ததும், யாழ் இளைஞர்களை தரக்குறைவாக பேசியதும் இங்கே கவனிக்க வேண்டியவை. அவையே சிக்கலுக்கான ஆதாரங்கள்.
கடந்த காலத்தில் எமது தேசத்தில் போராளிகளை காணத் திரண்ட மக்களின் கதைகளை நாம் அறிவோம். தலைவர் பிரபாகரன் அவர்களுக்காக சுதுமலையில் திரண்ட மக்கள் என்பது வரலாறு.
அத்துடன் வீரம் செறிந்த போர் வீரர்கள் நிஜமான கதாநாயகர்களாக வாழ்ந்த மண்ணில் சினிமா நடிகர்களைக் காட்டி சீரழிக்க முற்படுவதும் பணம் வசூலிப்பதும் கண்டிக்க வேண்டியது.
பாடகர்களை அழைப்பதில் தவறில்லை. நல்ல கருத்துக்களை கூறும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடிகர்களை, இயக்குனர்களை, எழுத்தாளர்களை, கவிஞர்களை அழைப்பதில் தவறில்லை. கவர்ச்சியை காட்டி காசைப் பறிக்க நினைப்பதே தவறு. அதுவே இந்த சிக்கலின் அடிப்படை.
எனவே ஈழ மண்ணுக்கும் யாழ் மண்ணுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் இது மாதிரியான செயல்களை எதிர்காலத்தில் தவிர்ப்பதே நல்லது. அதற்கான சிறந்த பாடம் இதுவாகும்.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை