ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் மொத்தம் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
அரச ஓய்வூதியர்களின் கூட்டு தேசிய அமைப்பின் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (02) காலை நடைபெற்ற விசேட சந்திப்பு ஓன்றிலேயே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்கி மூத்த பிரஜைகளின் வட்டி வீதத்தை அதிகரிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர் சம்பள ஏற்றத்தாழ்வு
அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவுக்கு 3,000 ரூபாவும் சேர்த்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் மொத்தம் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரசு ஊழியர் சம்பளத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கவனமாக பரிசீலித்து தொடர்புடைய எதிர்கால திருத்தங்களைச் செய்வதற்கு அதிமேதகு ஜனாதிபதி அறிவுறுத்தலின் படி, யு. ஆர். செனவிரத்ன தலைமையில் நிபுணர் குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டதாகவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
மேலும், மீளாய்வுகளின் அடிப்படையில் 2025ஆம் ஆண்டு முதல் திருத்தப்பட்ட சம்பளக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் வரை ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு இந்த இடைக்கால கொடுப்பனவை வழங்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.