அமெரிக்காவின் நியூயோர்க், நியூ ஜெர்சி மற்றும் பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் இடா சூறாவளியின் தாக்கத்தல் உண்டான பலத்த மழை வீழ்ச்சி மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
இவற்றில் நியூயோர்க் நகரம் மற்றும் புறநகர் வெஸ்ட்செஸ்டர் பகுதியில் வெள்ள நீரில் சிக்கி 16 பேர் வரை உயிரிழந்துள்ளதாக மாநில அதிகாரிகள் கூறுகின்றனர்.
நியூஜெர்சியில் குறைந்தது 23 பேர் பலியானதாத மாநில ஆளுனர் பில் மர்பி கூறினார்.
பென்சில்வேனியாவில் குறைந்தது ஐந்து உயிரிழப்புகளும், கனெக்டிகட் மற்றும் மேரிலாந்தில் தலா ஒவ்வொரு உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
இடா சூறாவளியால் ஏற்பட்ட பலத்த மழை காரணமாக பல வீதிகளும், வாகனங்களும், குடியிருப்புகளும், நகரின் பெரும்பலான சுரங்கப்பாதை அமைப்புகளும் வெள்ளத்தில் மூழ்கிப்போனது.
இந் நிலையில் இது தொடர்பில் வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நியூ ஜெர்சி மற்றும் நியூயோர்க் மற்றும் பாதிக்கப்பட்ட ஏனைய மாநிலங்களின் ஆளுநர்களுக்கு அவசர உதவி அளிப்பதாக தெரிவித்தார்… அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலும் ஆறுதலும் கூறினார்.