இங்கிலாந்துக்கு எதிராக லண்டன், ஓவல் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2:1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 2 ஆம் திகதி தொடங்கியது.
இதில் முதல் இன்னிங்ஸில் முறையே இந்தியா 191 ஓட்டங்களையும், இங்கிலாந்து 290 ஓட்டங்களையும் எடுத்தன.
99 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 466 ஓட்டங்களை குவித்து.
தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 127 ஓட்டங்களையும், புஜாரா 61 ஓட்டங்களையும் ரிஷாப் பந்த் 50 ஓட்டங்களையும், ஷர்துல் தாக்குர் 60 ஒட்டங்களையும் அணிசார்பில் அதிகபடியாக பெற்றனர்.
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 368 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலக்கை நோக்கி 2 ஆவது இன்னிங்ஸுக்காக ஆடிய இங்கிலாந்து அணி 4 ஆவது நாள் ஆட்டம் முடிவில் 32 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 77 ஓட்டங்களை எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பேர்ன்ஸ் 31 ஓட்டத்துடனும், ஹசீப் ஹமீத் 43 ஓட்டத்துடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
நேற்று 5 ஆவதும் மற்றும் இறுதியுமான நாள் ஆட்டம் நடந்தது.
மேலும் 291 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பேர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள்.
அணியின் ஓட்ட எண்ணிக்கை 100 ஓட்டங்களை எட்டியபோது, தொடக்க ஜோடி பிரிந்தது.
11 ஆவது அரைசதம் அடித்த ரோரி பேர்ன்ஸ் 50 ஓட்டங்களுடனேயே ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய டேவிட் மலான் 5 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
பின்னர் 61.3 ஆவது ஓவரில் ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சில் ஹசீப் ஹமீத்தும் 63 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தது.
இறுதியாக இங்கிலாந்து 92.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா, ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இரு அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி மான்செஸ்டரில் ஆரம்பமாகும்.