சனிக்கிழமையன்று ஆன்டிகுவாவின் நார்த் சவுண்டில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஐ.சி.சி.யின் 19 வயதுக்குட்பட்ட இளையோர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியதன் மூலம் இந்தியா 5 ஆவது முறையாகவும் சம்பியன் பட்டம் வென்றது.
190 என்ற இலகுவான வெற்றியிலக்கினை துரத்திய யாஷ் துல் தலைமையிலான இந்திய இளையோர் அணி நான்கு விக்கெட்டுகள் மற்றும் 14 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியிலக்கினை கடந்தது.
இந்திய அணியின் சகலதுறை வீரர் ராஜ் பாவா ஒரு வரலாற்று சிறப்புமிக்க 5 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் அணியின் வெற்றிக்கு பாரிய பங்களிப்பினை செய்தது மாத்திரமல்லாது, போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வானார்.
துடுப்பாட்டத்திலும் அவர் 35 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான 14 ஆவது இளையோர் உலக கிண்ண கிரிக்கெட் தெடரின் இறுதிப்போட்டி ஆன்டிகுவாவின் நார்த் சவுண்டில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் சனிக்கிகழமை நடைபெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, இந்தியாவின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து பறிகொடுத்தது.
இதனால் 61 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தத்தளித்தது.
பின்னர் இந்திய வீரர்கள் ராஜ் பவா, ரவி குமாரின் பந்து வீச்சில் தடுமாறிய இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களுக்கு மட்டுமே தாக்குப் பிடித்து 189 ஓட்டங்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ரிவ் 116 பந்தில் 95 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ராஜ் பவா 5 விக்கெட்களையும், மற்றொரு பந்து வீச்சாளர் ரவி குமார் 4 விக்கெட்களையும் மற்றும் கௌஷல் தம்பே ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
பின்னர் 190 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா துடுப்பெடுத்தாடியது.
தொடக்க வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி ஓட்டம் எதுவும் எடுக்காமல் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க வீரர் ஹர்னூர் சிங் 21 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
அணித் தலைவர் யாஷ் துல் 17 ஓட்டங்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.
எனினும் இந்திய வீரர்கள் ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, ராஜ்பாவா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இதில் ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து ஆகியோர் அரைச்சதம் அடித்தனர். ராஜ்பாவா 35 ஓட்டங்கள் எடுத்தார்.
இறுதியில் இந்திய அணி 47.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களை பெற்று நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்த இந்தியா, ஐந்தாவது முறையாக இளையோர் உலக கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.
இதற்கு முன்னர் 2000, 2008, 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் 19 வயதுக்குட்ட இந்திய இளையோர் அணி உலகக் கிண்ணத்தை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]