இங்கிலாந்து பூங்காவில் தனது எஜமானியை பலாத்காரம் செய்ய வந்தவரை கடித்து துரத்தியுள்ளது அவரது செல்ல நாய்.
நாய்கள் நன்றியுள்ளவை, மோப்பத் திறன் அதிகமுள்ளவை என்பது நாம் அறிந்த விஷயம்தான். அதனால்தான் போலீஸ், ராணுவம் உட்பட பல துறைகளிலும் அவற்றை ஈடுபடுத்துகின்றனர். வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் நாய்களின் நன்றியைப் பற்றி நிறைய செய்திகள் வெளிவந்துள்ளன. அதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் இங்கிலாந்தில் செல்ல நாய் ஒன்று தனது எஜமானியைக் காப்பாற்றி உள்ளது.
இங்கிலாந்தின் பெர்க் ஷைர் பகுதியில் உள்ளது வின்னெர்ஷ். இங்கு வசிக்கும் 36 வயது பெண் ஒருவர் சமீபத்தில் தனது செல்ல நாயுடன் பூங்காவுக்குச் சென்றுள்ளார். அங்கு நடை பயிற்சி மேற்கொண்டிருந்த போது, திடீரென ஓர் இளைஞர் அவரை பின்னால் இழுத்து கீழே தள்ளி பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
அதைப் பார்த்தவுடன் அந்தப் பெண்ணின் செல்ல நாய் ஓடிச் சென்று அந்த இளைஞரைக் கடித்து இழுக்கத் தொடங்கியது. நாயின் ஆவேசத்தை கண்டு அலறிய இளைஞர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து அந்தப் பெண் போலீஸில் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரின் உருவப் படத்தைப் போலீஸார் வெளியிட்டுள்ளனர். விரைவில் குற்றவாளியைப் பிடித்துவிடுவோம் என்று போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.