இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரான் பதவி விலகல்!
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கு ஆதரவு பெருகியதையடுத்து, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் 28 நாடுகள் உள்ளன. இந்த 28 நாடுகளும் உறுப்பு நாடு என்ற வகையில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடியை ஐரோப்பிய யூனியனுக்கு வழங்கி வந்தன. பிரிட்டனும் அவ்வாறு செலுத்தி வந்தது. இதனால் தங்கள் நாட்டுக்கு பொருளாதார சுமை ஏற்படுவதாகவும் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலையும் இருப்பதாக பிரிட்டன் மக்கள் கருதினர்.
உள்நாட்டவர்களின் வேலை வாய்ப்பு பறி போவது, பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்றவையும் பிரிட்டன் மக்களை ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டுமென்ற மனநிலைக்கு கொண்டு வந்தது. இதையடுத்தே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையும் வலு பெற்றது.
ஆனால் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மட்டும் பிரிட்டன் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனிலேயே நீடிக்க வேண்டும் என்றும், வாக்கெடுப்பில் தோல்வி கண்டால் பதவி விலகுவதாகவும் அறிவித்திருந்தார். அதன்படி வாக்கெடுப்பில் தோல்வி கண்டதையடுத்து அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
லண்டன் டவுனிங் தெருவில், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், செய்தியாளர்களிடம் பேசிய டேவிட் கேமரூன், ” நான் பதவி விலகும் சமயம் வந்து விட்டது. புதிய பிரதமர் அக்டோபர் மாதத்தில் தேர்வு செய்யப்படுவார். தேசம் மற்றொரு இலக்கை நோக்கி செல்லும் போது, நான் தலைமை பதவியில் இருப்பது சரியானதாக இருக்காது” என்றார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முதல் பெரிய நாடு பிரிட்டன். யூனியனில் இருந்து வெளியேறுவதால் பிரிட்டனை சில விஷயங்கள் பெரிதும் பாதிக்கக்கூடும். ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்திற்கு ஏற்றுமதி, இறக்குமதி வரி விதிப்பு கிடையாது. பிரிட்டனில் உற்பத்தியாகும் பொருட்களில் 50 சதவீதத்தை, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் ஏற்றுமதி வரி இல்லாமல் கொண்டு செல்லலாம். இனிமேல் வரி செலுத்த வேண்டியது இருக்கும்.
ஐரோப்பிய யூனியனின் முக்கிய வர்த்தகப் பகுதியாக பிரிட்டன் இருப்பதால், கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதன் மூலம் அதன் பொருளாதாரம் பாதிக்கப்படலாம். பிரிட்டனை விட்டு பெரிய நிறுவனங்கள் வெளியேறவும் வாய்ப்புள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருப்பதே பிரிட்டனின் பலம் என கருதும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், பிரிட்டனுக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்காமல் கூட போகலாம்.