இங்கிலாந்து – தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இப்போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முயற்சியில் தென் ஆப்ரிக்க அணி உள்ளது.
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும், தென் ஆப்ரிக்க அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இங்கிலாந்து அணியும், தொடரை சமன் செய்யும் முயற்சியில் தென் ஆப்ரிக்க அணியும் உள்ளன.
தென் ஆப்ரிக்க அணியைப் பொறுத்தவரை வெளிநாட்டுத் தொடர்களில் சிறப்பாக ஆடும் அணி என்ற தனது பெயரை காப்பாற்றிக்கொள்ள அந்த அணி விரும்புகிறது. அதற்கு ஹசிம் ஆம்லா, எல்கர், டுபிளெசிஸ் ஆகியோரின் பேட்டிங்கையே அந்த அணி பெரிதும் நம்பியுள்ளது.
கடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் அறிமுக பந்துவீச்சாளரான ரோலண்ட் ஜோன்ஸ், மொயின் அலி ஆகியோரிடம் அதிக விக்கெட்களை பறிகொடுத்த தென் ஆப்ரிக்க அணி, அவர்களின் பந்துவீச்சை சமாளிக்க கூடுதல் பயிற்சியுடன் களம் இறங்குகிறது.
இந்த டெஸ்ட் போட்டி குறித்து நேற்று நிருபர்களிடம் தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் டுபிளெஸிஸ் கூறியதாவது:
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின்போது தென் ஆப்ரிக்க வீரர்கள் அனைவரும் தங்கள் ஆட்டத் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். கடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக எல்கர் கடுமையாக போராடினார். இப்போட்டியில் அவர் 136 ரன்களைக் குவித்தார். அவரைப் போல் 4-வது டெஸ்ட் போட்டியில் அனைத்து தென் ஆப்ரிக்க வீரர்களும் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி ஆடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இப்போட்டி குறித்து நிருபர்களிடம் கூறும்போது, “ இந்தத் தொடரில் இதுவரை சிறப்பாக ஆடியுள்ளோம். அதே வேகத்தில் கடைசி டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற முயற்சிப்போம்” என்றார்.