இங்கிலாந்தின் உள்ளூர் தொடரான கவுண்டி கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் நான்கு பேர் பங்கேற்க உள்ளனர்.
கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்க, இந்திய வீரர்களான ரவிச்சந்திரன் அஷ்வின், புஜாரா, இஷாந்த் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு பி.சி.சி.ஐ அனுமதி அளித்துள்ளது. வோர்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடுவதை அஷ்வின் உறுதிசெய்துள்ளார். இலங்கை டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, நாட்டிங்ஹாம்ஷைர் அணிக்காக போட்டிகளில் பங்கேற்ற புஜாரா, சதம் ஒன்றையும் பதிவு செய்தார். இலங்கை டெஸ்ட் தொடர் முடிவடைந்துவிட்டதால், அவரும் இங்கிலாந்து செல்ல உள்ளார்.
வார்விக்ஷர் அணிக்காக இஷாந்த் சர்மா விளையாட உள்ளார். அதேநேரம், ரவீந்திர ஜடேஜா எந்த அணிக்காக விளையாடுகிறார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. செப்டம்பர் 5-ல் நடைபெறும் போட்டியில், புஜாராவின் நாட்டிங்ஹாம்ஷைர் அணியும், அஷ்வினின் வோர்செஸ்டர்ஷைர் அணியும் மோத உள்ளன. இலங்கை அணிக்கெதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் நான்கு பேருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் அஷ்வின், புஜாரா, ஜடேஜா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.