அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. முதல் போட்டியில் இந்திய அணி வென்றிருந்தநிலையில், இரண்டாவது போட்டியில் வென்று ஆஸ்திரேலிய அணி தொடரை சமன் செய்தது. போட்டிக்குப் பின்னர் ஆஸ்திரேலிய வீரர்கள் சென்ற பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கல்வீச்சில் உடைந்த பேருந்தின் கண்ணாடியை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் வேதனை தெரிவித்திருந்தார். இந்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அம்மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனாவாலிடம் பேசினார். கல்வீச்சு சம்பவம் தொடர்பாக அசாம் மாநில காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் சென்ற பேருந்து மீது கல்வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம் மாநில டி.ஜி.பி. முகேஷ் சாஹே தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.