ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கும், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே இருந்துவந்த சம்பளப் பிரச்சினை முடிவுக்கு வந்தது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கும், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக சம்பளப் பிரச்சினை இருந்து வந்தது. சம்பளம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்படாததால், சுமார் 230 கிரிக்கெட் வீரர்களும், வீராங்கனைகளும் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காணாத வரையில் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கப் போவதில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
கிரிக்கெட் வீரர்களின் இந்த முடிவால், வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி ஆடுவது சந்தேகமாக இருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கும், வீரர்களுக்கும் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. இதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. வீரர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.2,522 கோடியை ஒதுக்குவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டது. இந்த ஊதிய ஒப்பந்தத்தில் முதல் முறையாக கிரிக்கெட் வீராங்கனைகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2 தரப்பினரும் சில சமரசங்களைச் செய்துகொண்டு சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கண்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜேம்ஸ் சதர்லாண்ட் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி, கிரிக்கெட் தொடர்களில் ஆடுவதில் ஏற்பட்டிருந்த சிக்கல் தீர்ந்தது.