வருடம் தொடங்கினாலே, டென்னிஸ் ரசிகர்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். ஒரு வருடத்தின் டென்னிஸ் போட்டிகளை பிள்ளையார்சுழி போட்டு தொடங்கிவைப்பது ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடர்.
கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் தொடர் இன்று தொடங்கி (ஜனவரி 15), ஜனவரி 28-ம் தேதி வரை நடக்கிறது. அழகிய மெல்போர்ன் நகரில் நடைபெறும் இந்தத் தொடரில் உலகின் 49 நாடுகளிலிருந்து 256 வீரர்கள் பங்கேற்கின்றனர். 50 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பரிசுத்தொகையாகக்கொண்ட வருடத்தின் மாபெரும் முதல் கிராண்ட்ஸ்லாம், வீரர்களின் அந்த வருடத்துக்கான டென்னிஸ் பயணத்தைக் கணிப்பதாகவே அமையும். இந்த ஆண்டும் பலத்த எதிர்பார்ப்புகளுடன் களம் இறங்கும் வீரர்களில் கோப்பையை வெல்லப்போவது யார் என்பது கணிக்க இயலாத ஒன்றே. நட்சத்திர ஆட்டக்காரரான ஆண்டி முர்ரே, இடுப்புப் பகுதியில் செய்துகொண்ட அறுவை சிகிச்சை காரணமாகக் கலந்துகொள்ளவில்லை. அதேபோல, தொடரில் கலந்துகொள்ளும் மற்ற நட்சத்திர வீரர்களில் பலரும், காயங்களிலிருந்து மீண்டே களம் காண்கின்றனர். ஆதலால், புதுமுகங்களுக்கான வாய்ப்பு இந்தாண்டில் பிரகாசமாகியுள்ளது.
சர்வதேச டென்னிஸ் தர வரிசையில், முதல் இடத்தில் இருக்கும் ரஃபேல் நடால், கடந்த ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறினார். நீண்டநாள் ஓய்வுக்குப் பின் களமிறங்கிய நடால், இறுதிப் போட்டி வரை முன்னேறியது, சென்ற ஆண்டின் ஸ்வீட் சர்ப்ரைஸ். ஆஸ்திரேலிய ஓப்பனுக்குப் பின்னர், ஃப்ரெஞ்ச் ஓப்பன் மற்றும் அமெரிக்க ஓப்பன் பட்டங்களை வென்று, தான் இன்னும் டென்னிஸ் ஆட்டத்தில் முன்னணி வீரர்தான் என்பதை நடால் உரக்கச் சொன்னார். அந்த வகையில், நடாலின் கடந்த ஆண்டு செயல்பாடுகளுக்கு அடித்தளமிட்டது, ஆஸ்திரேலியன் ஓப்பன்.
தர வரிசையில் இரண்டாம் நிலை வீரரும், சென்ற ஆண்டு பட்டம் வென்றவருமான ரோஜர் ஃபெடெரர், இந்த ஆண்டும் பட்டம் வெல்வார் என்று, அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். டென்னிஸ் விமர்சகர்களும் இந்தக் கணிப்புக்கு ஆதரவுகொடுக்கின்றனர். முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் ஆக்ரோஷமாக விளையாட இயலாமல் இருந்த ஃபெடெரெர், ‘பேக் டு ஃபார்ம்’ என்று கூறியது கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பன் மூலமாகத்தான். அதைத் தொடர்ந்து, அவர் தொடர்ந்து 2 கிராண்ட்ஸ்லாம் தொடர்களின் பட்டம் வென்றார். இருந்தாலும், அவர் அமெரிக்க ஒப்பனில் காலிறுதியில் வெளியேறியது இங்கும் தொடர வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டில், பெரும் சறுக்கல்களைச் சந்தித்த ஜோகோவிச், இந்த ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் விளையாட உள்ளார். சென்ற ஆண்டில் 12-ம் நிலைக்குத் தள்ளப்பட்ட ஜோகோவிச், வலது தோள்பட்டை வலியால் கடந்த ஆண்டு விம்பிள்டன் காலிறுதியில் வெளியேறினார். அதன்பின்னர், சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து விலகியே இருந்தார். தோள்பட்டை வலியைச் சமாளிக்க புதிய சர்வீஸ் முறையை அவர் பயன்படுத்த உள்ளதாகத் தெரிகிறது. எனினும், அவருக்கு இந்த கிராண்ட்ஸ்லாம் தொடர் சாதகமாக அமையுமா என்பது சந்தேகமே.
டென்னிஸின் பெரிய தலைகள் அனைவரும் களத்தில் இருந்தாலும், இது இளைஞர்களுக்கான களமாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. க்ரிகோர் டிமிட்ரோவ், அலெக்சாண்டர் ஸ்வெனர், நிக் கைர்கியோஸ் என அடுத்த தலைமுறை வீரர்கள் தலை யெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் கோப்பையை வெல்லாவிடிலும், முன்னணி வீரர்களுக்கு பெரும் சவாலாக விளங்குவார்கள். நிச்சயம் கவனம் ஈர்ப்பார்கள். சர்வதேச தர நிலையில் கடந்த 2016-ம் ஆண்டில், 40-ம் இடத்தில் இருந்த க்ரிகோர் டிமிட்ரோவ், 2017-ம் ஆண்டின் இறுதியில் 3-ம் இடத்துக்கு முன்னேறி, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ‘ பேபி ஃபெடெரெர்’ என அழைக்கப்படும் இவர், முன்னணி வீரர்களுக்கு போட்டியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 20 வயதே ஆன அலெக்சாண்டர் ஸ்வெனர், கடந்த ஆண்டில் ஐந்து பட்டங்களை வென்றுள்ளார். அதிலும், ஒரு போட்டியில் முன்னணி வீரர் டேவிட் ஃ பெடெரெரை இவர் தோற்கடித்தார். 2017-ம் ஆண்டின் இறுதியில், தர வரிசைப் பட்டியலில் 4-ம் நிலைக்கு இவர் முன்னேறியிருந்தார். இந்த ஆண்டு, இவர்மீது எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. பாரிஸ் ஓப்பனை வென்று 2018-ம் ஆண்டைத் தொடங்கியிருக்கும் ஆஸ்திரேலிய வீரர், நிக் கைர்கியோஸ் கவனிக்கப்படும் வீரர்களில் ஒருவர். சொந்த நாட்டில் நடக்கும் கிராண்ட் ஸ்லாம் தொடர் என்பதால், அவரது நம்பிக்கை வேற லெவலில் இருக்கும் என்று நம்பலாம்.
முன்னணி வீரர்கள் பலரும் காயங்களினால் பின்தங்கிய நிலையில், புதுமுக வீரர்களுக்கான தடமாக இந்தத் தொடர் அமையும். ஒட்டுமொத்த டென்னிஸ் உலகின் தலைமுறை மாற்றம், வெகு தொலைவில் இல்லை. அதற்கான தொடக்கமாக இந்தத் தொடர் அமையலாம். எதிர்பாராத வெற்றிகளும், அதிர்ச்சியளிக்கும் தோல்விகளும் இத்தொடர் நிச்சயம் வழங்கும். எனினும், ரசிக்கத்தக்க விளையாட்டு விருந்துக்கும், பிரமிக்கவைக்கும் நிகழ்வுகளுக்கும் பஞ்சம் இருக்காது. இந்த ஆண்டுக்கான டென்னிஸ் பயணத்தின் தொடக்கம், ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தரும். ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடர், ஏற்கெனவே மின்னும் டென்னிஸ் நாயகர்களின் வரலாற்றுப் பக்கங்களில் சேர்க்கப்படும் மற்றுமொரு பக்கமாக மாறுமா? அல்லது புதிதாக ஜொலிக்க முயலும் புதுமுகங்களின் முதல் பக்கமாக மாறுமா என்பதற்கு காலமே பதில்.