ஆஸ்திரேலியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்கிறது. வங்கதேசத்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் அந்த அணி ஆடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி மிர்பூரில் இன்று தொடங்குகிறது. வங்கதேசத்தில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளதால் ஆஸ்திரேலிய அணி கடும் சவாலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை அதன் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தின் பேட்டிங் பார்மை அந்த அணி பெரிதும் நம்பியுள்ளது. முன்னதாக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் ஸ்மித் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார். இந்த தொடரில் அவர் 3 சதங்களை விளாசினார். அதே ஆட்டத்தை இந்த தொடரிலும் அவர் வெளிப்படுத்துவார் என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் நம்புகின்றனர். அவருக்கு உதவியாக கவாஜா, டேவிட் வார்னர், மாட் ரென்ஷா ஆகியோரும் ஆடும் பட்சத்தில் வங்கதேச அணிக்கு அந்த அணி சவால் விடலாம். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் போட்டி நடைபெறவுள்ளதால் அஷ்டன் அகர், நாதன் லயன் ஆகிய 2 சுழற்பந்து வீச்சாளர்களை ஆஸ்திரேலிய அணி பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூரில் ஆடுவதால் வங்கதேச அணி அதிக தன்னம்பிக்கையுடன் உள்ளது. சமீபத்தில் நடந்த தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது அந்த அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசனை அதிகம் சார்ந்துள்ள போதிலும், தமிம் இக்பால், முஷ்டபிசுர் ரஹிம், சவுமியா சர்க்கார் என்று அவருக்கு தோள்கொடுக்கக் கூடிய சிறந்த வீரர்கள் வங்கதேச அணியில் உள்ளனர். இரு அணியும் சம பலத்தில் உள்ளதால் இப்போட்டி பரபரப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.