வெயில் பிரியங்கா, ஹரிஷ் பெரடி நடித்துள்ள படம் கானல் நீர். இதனை சோகன் ராய் தயாரித்திருக்கிறார். டி.எஸ் சுரேஷ் பாபு திரைக்கதை எழுதியுள்ளார். எம்.பிரேம்குமார் இயக்கி உள்ளார். இது நன்கொடை வசூலிக்கப்பட்டு அதன் மூலம் தயாரான படம். பல உலக பட விழாக்களில் போட்டியிட்டு விருது பல வென்ற இந்த படம் வருகிற செப்டம்பர் 13ந் தேதி வெளிவருகிறது. படம் பற்றி இயக்குனர் எம்.பிரேம்குமார் கூறியதாவது:
பாலம் ஒன்றின் கீழ் வசித்த குடும்பம் பற்றி நாளிதழில் வெளியான செய்திக்கட்டுரையை அடிப்படையாக கொண்டு கானல்நீர் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பரபரப்பான நகரின் மத்தியில் வாழும், வீடில்லாத பெண் மற்றும் அவரது குழந்தையின் போராட்டமான வாழ்க்கையை சித்தரிக்கும் இந்த திரைப்படம் ஏற்கனவே சமூகத்தின் அனைத்து தரப்பைச்சேர்ந்த முன்னணி மனிதர்களை கவர்ந்திருக்கிறது.
பெரும்பாலான நிலமில்லாதவர்கள், தங்கள் குடும்ப பெண்களை பாலியல் தாக்குதலில் இருந்து காப்பதற்கான பாதுகாப்பான இடத்தை தேடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதிகாரவர்கத்தால் அலட்சியம் செய்ப்படும், நில உரிமை போராட்டம் பற்றியும் திரைப்படம் பேசுகிறது. இந்த திரைப்படம் பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பரவலான பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு செல்லும் படங்களின் போட்டியிலும் இந்தப் படம் இருக்கிறது. என்றார்.