ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது.
அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 346 ரன் குவித்தது. அதிகபட்சமாக ரூட் 83 ரன்கள் எடுத்தார். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய அவுஸ்திரேலிய அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது.
உஸ்மான் கவாஜா 171 ரன்கள், ஷான் மார்ஷ் 156 ரன்கள், மிட்செல் மார்ஷ் 101 ரன்கள், ஸ்மித் 83 ரன்கள் குவித்தனர். இதனால் 4-ம் நாள் ஆட்டத்தின்போது அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 649 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் 303 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது.ஸ்டோன்மேன் ரன் எதுவும் எடுக்கமல் அவுட் ஆனார். குக் 10 ரன்களும், வின்ஸ் 18 ரன்களும், தாவித் மலன் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 4-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 42 ரன்னுடனும், பேர்ஸ்டோவ் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஜோ ரூட் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக ஆட்டத்திலிருந்து பாதியில் விலகினார். அதன்பின் இணைந்த வீரர்களும் நிலைக்கவில்லை.
மொயீன் அலி 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். விக்கெட்டை காப்பாற்ற கடுமையாகப் போராடிய பேர்ஸ்டோவ் 38 ரன்கள் சேர்த்தார். பிராட் 4 ரன்கள், கிரேன் 2 ரன்கள், ஆண்டர்சன் 2 ரன்கள் என வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, இங்கிலாந்து அணி 180 ரன்களில் சுருண்டது. குரன் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட் கம்மின்சுக்கு ஆட்டநாயகன்விருதும், ஸ்டீவன் ஸ்மித்துக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.