ஆளில்லாத விமான தாக்குதல்: தவறுதலாக கொல்லப்பட்ட 116 பேர்
அமெரிக்காவின் ஆளில்லாத விமான தாக்குதலில் இதுவரை 116 பேர் பல நாடுகளிலாக கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் வெளியிட்டுள்ள இந்த தகவலில், ஏற்கனவே பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகள் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையை விடவும் குறைவாக காட்டப்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆளில்லாத விமான தாக்குதல் தவறுதலாக நடந்ததாக கூறும் அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள், இது அமெரிக்கா போர் தொடுக்காத நாடுகளில் நடந்த நிகழ்வுகள் எனவும் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக லிபியா, பாகிஸ்தான், சோமாலியா, யேமன் மற்றும் பிற ஆப்ரிக்க நாடுகளில் அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் இதுவரை அப்பாவி மக்கள் 116 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் நடத்தப்பட்ட ஆளில்லாத விமான தாக்குதல் குறித்த தகவல்கள் இல்லை.
தற்போது வெளியிட்டுள்ள இந்த தகவல்கள் கூட உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அல்ல என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், இது மேலும் மாற்றி அமைக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மனித உரிமைகள் அமைப்பின் வழக்குரைஞர் ஒருவர் தெரிவிக்கையில், ஆளில்லாத அமெரிக்க விமான தாக்குதலால் இதுவரை 4000 அப்பாவி மக்கள் வரை இறந்திருக்கலாம் என்றார். இதில் நூற்றுக்கணக்கான சிறுவர்களும் அடங்குவர் எனவும், ஒபாமா அரசு உண்மை தகவல்களை ஒருபோதும் வெளியிடப்போவதில்லை என்றார்.