பணப்பட்டுவாடா செய்ததாக தவறுதலாக கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்று ஆர்கே நகரில் மக்களும், திமுக, தினகரன் அணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்டு பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்தானதால் இந்த முறை கண்காணிப்பை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளதாக கூறியிருந்தது.
இன்னும் 4 நாள்களே உள்ளதால் கட்சியினர் ஆர்கே நகரில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின்பேரில் போலீஸார் 6 பேரை கைது செய்தனர். இதனிடையே கைது செய்யப்பட்டவர்களை போலீஸார் தவறுதலாக கைது செய்துவிட்டனர் என்று கூறி அவர்களை வெளியே விடுமாறு வலியுறுத்தி ஆர்கே நகர் மக்களும், திமுக, தினகரன் அணியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஒன்றரை மணி நேரம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்த மக்களை அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்தை சீர் செய்தனர். மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.