தமிழில் முதன்முறையாக அறிமுகமாகும் தெலுங்கின் முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளான இன்று, அவரது நடிப்பில் தயாராகி வரும் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் இடம் பெற்ற புதிய புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ ஆகிய படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக தயாராகி வரும் திரைப்படம் ‘ஆர். ஆர். ஆர் எனப்படும் ரணம் ரத்தம் ரௌத்திரம்’.
இந்தப்படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம்சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர், முன்னணி பொலிவுட் நடிகரான அஜய் தேவகன், பொலிவூட் நடிகையான ஆலியா பட் , ஹொலிவுட் நடிகையான ஒலிவியா மோரிஸ் மற்றும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி படம் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்திருக்கும் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர் அவர்களின் பிறந்தநாள் இன்று. இதனை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் அவரின் வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அவருடைய ரசிகர்கள் இதனை இணையத்தில் வைரலாக்கி கொண்டாடி வருகிறார்கள்.