பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் காரியாலயத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த அக்காரியாலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் இலங்கை இராணுவ அதிகாரி பிரிகேடியருக்கு எதிராக இலங்கை இராணுவம் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
லண்டன் நகரிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் முடிவடைந்தவுடன் குறித்த பிரிகேடியர் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு இராணுவம் விசாரணைகளை தனியாக முன்னெடுக்கவுள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் கூறியுள்ளார்.
இலங்கை அரசுக்கு எதிராக பிரித்தானியாவில் புலம் பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இவ்வார்ப்பாட்டம் லண்டன் இலங்கை உயர் ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
இதன்போது, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களின் கழுத்தை வெட்டுவதாக இலங்கை உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ சைகை செய்த காட்சி சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியுள்ளது. இதனையடுத்து, இவரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வெளிவிவகார அமைச்சு பணி நீக்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.