ஆர்கே., நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என சினிமா சம்பந்தப்பட்ட பொறுப்புகள், பிரச்னைகளையும் தாண்டி, சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கும் குரல் கொடுப்பவர் நடிகர் விஷால். எதிர்காலத்தில் இவரும் அரசியலில் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் ஆர்கே., நகர் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. திமுக., சார்பில் மருது கணேஷூம், அதிமுக., சார்பில் மதுசூதனனும், டிடிவி தினகரன் தனியாகவும் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். இவர்களோடு நடிகர் விஷாலும் சுயேட்சையாக போட்டியிட போவதாக கடந்த ஒருவாரமாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. வருகிற திங்களன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதை விஷால் மறுத்துள்ளார். “ஆர்கே நகரில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை, நான் போட்டியிடுவதாக வெளியான செய்தி தவறானது” என்று கூறியுள்ளார்.