அரச பாடசாலைகளில் தரம் 01 முதல் தரம் 05 வரையிலுள்ள ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு எழுத்து மூலப் பரீட்சைகள் எதனையும் நடத்தாதிருக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கல்விச் சேவை ஆணைக்குழு அரசாங்கத்திடம் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அவ்வாணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் லக்ஷ்மன் ஜயதிலக்க கூறுகையில்,
தரம் ஒன்று முதல் ஐந்து வரையான மாணவர்களுக்கு எழுத்து மூலப் பரீட்சைகள் அவசியமற்றது. அவர்களை மதிப்பீடு செய்ய வேறு முறைமைகள் உள்ளன. பாடசாலையின் நிலைமையை அறிந்துகொள்ள தரம் ஐந்திற்குப் பின்னர் பரீட்சையை நடாத்தினால் போதுமானது.
பரீட்சை நடாத்துவது மாணவர்களை போட்டிபோடச் செய்வதற்காக அல்ல. பாடசாலை ஆசிரியர்கள் செயற்படுகின்றார்களா? மாணவர்களின் அடைவு மட்டம் அடையப் பெறுகின்றதா? அதிபர் பாடசாலையை ஒழுங்காக வழிநடாத்திச் செல்கின்றாரா? என்பதை அறிய வேறு வழிமுறைகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.