உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோவில்களுக்கும் தலைமை பீடம், சமயபுரம் தான். சமயபுரம் மாரியம்மனின் சிறப்பை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மார்க்கண்டேயரை எமனிடமிருந்து காப்பாற்ற, ஈசன் கால சம்ஹார மூர்த்தியாக அவதரித்து எமதர்மனை அழித்தார். இதனால் உலகில் பிறப்பு- இறப்பு நிலையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. எமதர்மனின் சபையில் நோய்களின் அதிபதியாக இருந்த மாயாசூரன் என்பவன், பூவுலகில் இறப்பு நின்றுவிட்ட நிலையில், நோய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தினான். அவனோடு அவனது சகோதரர்களும் சேர்ந்து மக்களை வாட்டி வதைத்தனர்.
இதனைக்கண்ட ஈசன் பார்வதி தேவியைப் பார்க்க, பார்வதி தேவி தன் அம்சமாக மாரியம்மனை தோற்றுவித்து, மாயாசூரனை வதம் செய்ய அனுப்பிவைத்தாள். மாரியம்மன் மாயாசூரனையும் அவனது சகோதரர்களையும் வதம் செய்து, அவர்கள் தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றினாள்.
பின்னர் ஈசனின் அருளுடன் தனது சகோதரர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ‘வைஷ்ணவி’ என்ற பெயரில் அமர்ந்தாள். பின்னர் இப்போதுள்ள சமயபுரத்தில் வந்தமர்ந்து மாரியம்மனாக அருள்பாலிக்கிறார்.
உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோவில்களுக்கும் தலைமை பீடம், சமயபுரம் தான். இன்றும் சமயபுரம் மாரியம்மனுக்கு தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் இருந்து சீர்வரிசைகள் வருகின்றன. அதுபோல மாசியில் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் போது, சமயபுரத்தில் பூச்சொரிதல் விழா நடைபெறும். அப்போது சமயபுரம் மாரியம்மனுக்கு முதல் பூவாக ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் இருந்து வரும் பூவே பயன்படுத்தப்படுகிறது.
அதுபோல சித்திரை தேரோட்டத்தின் போது சமயபுரம் மாரியம்மனுக்கான சீர்வரிசைகள், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் இருந்து வருகிறதாம். சமயபுரத்தாளின் பேரழகு ததும்பும் அந்த செந்தூர முகத்தை கண்டாலே நம் கவலைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
ஆலயக் கருவறையில் சமயபுரம் மாரியம்மனின் வலது திருப்பாதம், மாயாசூரனின் தலைமீது பதிந்துள்ளதைக் காணலாம். மாரியம்மன் தனது எட்டுக் கரங்களில் இடப்புறமாக கபாலம், மணி, வில், பாசம், வலப்புறமாக கத்தி, சூலம், அம்பு மற்றும் உடுக்கை ஆகிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளாள். இடதுகாலை மடக்கி வைத்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் மாயாசூரனின் தலைமீது பதித்துள்ளாள்.
இங்கு இரண்டு தீர்த்த குளங்கள் உண்டு. ஒன்று பெருவளை வாய்க்கால் தீர்த்தம், மற்றொன்று மாரி தீர்த்தம். இத்தல அம்மன் சிவரூபமாக அறியப்படுவதால், விபூதியே பிரசாதமாக தரப்படுகிறது. வேப்ப மரம்தான் இங்கு தல விருட்சம். உற்சவர் அம்மனின் திருநாமம் ‘ஆயிரம் கண்ணுடையாள்’ என்பதாகும். கருப்பண்ணசாமி குதிரை வாகனத்தில் இத்தலத்தை காவல் புரிகிறார். இந்த கோவிலில் மூன்று விநாயகர்கள் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியாக ஒரே கருவறையில் அருள்பாலிக்கின்றனர். சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் நோய்கள் அனைத்தும் நீங்கும்.
இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் முதல் செவ்வாய் அன்று தேரோட்டம் நடைபெறும். அப்போது அடியவர்கள் அலகு குத்தி, மொட்டையடித்து, தீச்சட்டி ஏந்தி, பால்குடம் எடுத்து, அங்க பிரதட்சணம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
திருச்சி சத்திரம் பேருந்துநிலையத்தில் இருந்து திருவானைக்காவல் வழியாக 15 கி.மீ. தொலைவில் சமயபுரம் அமைந்துள்ளது.