பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் செப்டெம்பர் 3 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவிருந்தது.
எனினும் திங்களன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையிலான பரஸ்பர பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தொடர் காலவரையின்று ஒத்திவைக்கப்பட்டது.
ஆடுகள சிக்கல்கள் மற்றும் மோதலால் பாதிக்கப்பட்ட தேசத்தை தலிபான் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் வீரர்களின் மன ஆரோக்கியத்தை கருத்திற் கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (ACB) தலைமை நிர்வாக அதிகாரி ஹமீத் ஷின்வாரி ESPNcricinfo விற்கு இந்தத் தொடரை பாகிஸ்தானுக்கு மாற்ற முயற்சித்ததை உறுதிப்படுத்தினார்.
ஆனால் இறுதியில் ஆப்கானிஸ்தானைச் சுற்றியுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தொடரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாக கூறினார்.
தலிபான்கள் ஆப்கானை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததைத் தொடர்ந்து காபூலில் இருந்து வணிக விமானங்கள் எதுவும் புறப்படவில்லை. மேலும், இலங்கையின் கொவிட்-19 நிலைமைகள் மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவு காரணமாக தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.