ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலை வேகமாக மோசமடைந்து வரும் நிலையில், காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து சில பணியாளர்களை வெளியேற்ற உதவுவதற்காக அமெரிக்கா கூடுதலாக 3,000 வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பவுள்ளது.
திட்டமிட்ட இடமாற்றங்கள் இருந்தபோதிலும் காபூல் உள்ள தமது தூதரகம் திறந்திருக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறினார்.
பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, அமெரிக்க தூதரக பணியாளர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் சிறப்பு குடியேற்ற விசா (SIV) விண்ணப்பதாரர்களை வெளியேற்ற உதவ 3,000 வீரர்களை அனுப்புவதாக உறுதிப்படுத்தினார்.
எவ்வாறாயினும் இந்த படைகள் ஆப்கானிஸ்தானில் நீண்ட காலம் தங்காது என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த பயணத்தின்போது அமெரிக்க படைகள் தாக்கப்பட்டால் அவர்கள் பதில் தாக்குதலை முன்னெடுப்பார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
இதேவேளை பிரிட்டிஷ் குடிமக்கள் வெளியேற உதவுவதற்காக சுமார் 600 இங்கிலாந்து வீரர்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரிட்டிஷ் பாதுகாப்புச் செயலாளர் பென் வாலஸ், எமது நாட்டவர்கள், இராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ஆப்கானிஸ்தான் ஊழியர்களின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முதல் முன்னுரிமை என்றும், “அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்” என்றும் கூறினார்.
கடந்த வாரம் வெளியுறவு அலுவலகம் அனைத்து பிரிட்டிஷ் நாட்டினரையும் வெளியேறுமாறு அறிவுறுத்தியது.
சுமார் 4,000 பிரிட்டிஷ் குடிமக்கள் இன்னும் நாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
_____________________________________________________________________________