ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.
பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 24 மணிநேரமாக ஆப்கானிஸ்தான் நாட்டின் லோகர், கஸ்னி மற்றும் குன்டுஸ் மாகாணங்களில் விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் 42 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
விமானப்படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கஸ்னி மாகாணத்தில் 16 பேர், குன்டுஸ் மாகாணத்தில் 15 பேர், நாட்டின் தென்பகுதியில் உள்ள உருக்ஸான் மற்றும் ஸாபுல் மாகாணத்தில் 9 பேர், லோகார் மாகாணத்தில் இருவர் என 42 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டதாகவும் ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.