ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் 70 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பர்வான் மாகாணத்தின் தலைநகரான சாரிகர் நகரத்தின் பெரும் பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ள நிலையில் பல வீடுகள் இடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த இடிபாடுகளுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணி தொடர்வதாகவும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுவதாகவும் பர்வான் மாகாணத்தின் செய்தித் தொடர்பாளர் வஹிதா ஷாகர் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.
இந்த அனர்த்தத்தில் இதுவரை 90 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பேரனர்த்தத்தில் இருந்து மீள உள்ளூர் அரசாங்கத்தின் நடவடிக்கை போதாது எனவும் மத்திய அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஷாகர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஒரே இரவில் பெய்த பலத்த மழை காரணமாக உயிரிழந்தவர்களில் அதிகமானோர் சிறுவர்கள் என அந்நாட்டு பேரிடர் மேலாண்மை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.