போரின் காரணமாக ஆப்கானிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து பாகிஸ்தான் மற்றும் ஈரானில் வாழ்ந்து வந்த 76,400 அகதிகள் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே திரும்பியுள்ளதாக சர்வதேச இடப்பெயர்வு அமைப்பான ஐ.ஓ.எம் தெரிவித்துள்ளது. இதில், ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிச்செலல் விரும்பாத ஆயிரக்கணக்கான அகதிகளும் நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களில் பாகிஸ்தானிலிருந்து 3,032 அகதிகளும், ஈரானிலிருந்து 73,390 அகதிகளும் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்
பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பும் ஆப்கான் அகதிகளில் 90 சதவீத பேருக்கும், ஈரானிலிருந்து 4 சதவீத பேருக்கும் ஐ.ஓ.எம். திரும்பிச்செல்வதற்கான கூடுதல் உதவிகளை வழங்கியுள்ளது.
பாகிஸ்தானின் தொடர் பிரசாரத்தால் 2016ம் ஆண்டு 4 லட்சம் அகதிகள் ஆப்கானிஸ்தானுக்கே திரும்பியிருந்தனர். அதில் 60,000 அகதிகள் கடந்த ஆண்டு மீண்டும் பாகிஸ்தானுக்கே திரும்பி வந்துவிட்டதாக, பாகிஸ்தானின் மூத்த அரசதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அப்படி திரும்பி வந்த அப்துல்லா கான், “இதுவே என் வாழ்வில் மிகமோசமான அனுபவம்” எனத் தெரிவித்திருக்கிறார். 60 வயதான அப்துல்லா கான் 15 வயதாக இருந்த போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக அங்கேயே வாழ்ந்துள்ளார்.
“ஆப்கானில் வேலை இல்லை, நல்ல தண்ணீர் இல்லை, மருத்துவர்கள் இல்லை, மருத்துவமனை இல்லை. எதுவுமே இல்லை. ஆனால் தீவிரவாதிகளின் கையில் எந்நேரமும மரணம் நேரிடும் என்ற பயம் மட்டும் நிலையாக உள்ளது” என்கிறார் அப்துல்லா கான்.
பாகிஸ்தானின் பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் ஆப்கான் அகதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறும் அந்நாட்டு அரசு, பதிவுச்செய்யப்பட்ட 14 லட்சம் ஆப்கான் அகதிகளும் இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே பாகிஸ்தானில் வசிக்க முடியும் என கெடு விதித்துள்ளது. இந்த எச்சரிக்கை ஆப்கான் அகதிகளிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
“பாகிஸ்தானில் மட்டும் நாங்கள் ரோஜா மெத்தையின் மீது வாழவில்லை. ஆனால் இங்கு பாதுகாப்பாக உணர்கிறோம். எங்கள் குழந்தைகளுக்கு கல்வியும் மருத்துவமும் கிடைக்கின்றது” என்கிறார் 30 ஆண்டுகளாக பாகிஸ்தானில் வசிக்கும் அசிசி என்ற ஆப்கான் அகதி.
1970 பிற்பகுதியில் ஆப்கானிஸ்தான் மீது சோவியத் யூனியனின் எடுத்த படையெடுப்பு லட்சக்கணக்கான ஆப்கானியர்களை பாகிஸ்தான் மற்றும் ஈரானை நோக்கி அகதிகளாக நகர்த்தியது. 2001ன் முடிவில் 40 லட்சம் ஆப்கான் அகதிகள் பாகிஸ்தானிலும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் ஈரானிலும் தஞ்சமடைந்திருந்தனர். இவர்களின் தொடர்பு இருப்பு பாதுகாப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக எண்ணும் பாகிஸ்தான் மற்றும் ஈரான் அரசுகள், ஆப்கான் அகதிகளை வெளியேற்ற பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.