ஆப்கானிஸ்தானின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் மேனா மங்கல். ஆப்கானிஸ்தானில் உள்ள நெருக்கடியை அறிவிப்பதன் மூலம் உலகிற்கு தெரியவந்தவர். வக்கீலுமான இவர் பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைக்காக சட்டப் போராட்டங்களை மேற்கொண்டார். மேனா மங்கல் ஆப்கானிஸ்தான் மக்களிடம் மிகவும் பிரபலமானவர். பத்திரிகை துறையில் இருந்து விலகிய மேனா மங்கல், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கலாசார ஆலோசகராக சமீபத்தில் நியமிக்கப்படார்.
தொடர்ந்து, அவர் பெண் உரிமைகளுக்காகவும், நாட்டு பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்து வந்தார்.
நேற்று காலை தலைநகர் காபூலில் உள்ள தனது வீட்டில் இருந்து மேனா மங்கல், வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து, துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மேனா மங்கல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேனா மங்கல் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் ஆப்கானிஸ்தானின் பெண் உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேனா மங்கலுக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் இருந்து வந்துள்ளது. இதனை கடந்த 3–ந்தேதி ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்ட மேனா மங்கல், மரணத்துக்கு அஞ்சும் ஆள் இல்லை என குறிப்பிட்டார். இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடப்பதாக பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.