ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும் தாலிபானுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானின் எல்லைகளை நோக்கி மக்கள் இடம்பெயர்வதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
“ஆப்கான் நாட்டை ஒட்டிய ஈரானிய, மற்றும் பாகிஸ்தானின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், எல்லைகளைக் கடப்பதற்கு சட்டவிரோதப் பாதைகளை ஆப்கான் மக்கள் பயன்படுத்துகின்றனர்,” என ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா.வின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் ரமீஸ் அல்அக்பரோவ் தெரிவித்திருக்கிறார்.
வறட்சி, அதிகரித்து வரும் ராணுவ ரீதியான நடவடிக்கைகள் மற்றும் வளர்ந்து வரும் தாலிபானின் ஆதிக்கம் காரணமாக ஆப்கான் மக்கள் தொடர்ந்து இடம்பெயருவதாகக் கூறப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானின் கிராமப்புற பகுதிகளில் இருந்து வெளியேறிய 270,000 பேர் அருகாமையில் உள்ள நகர்ப்புறப் பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளதாக அல்அக்பரோவ் குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை எட்டியுள்ளது என ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்திருக்கிறது.