ஆபிரிக்க நாடுகளுக்கு சீனா மனித இறைச்சி விற்பனை? மறுக்கிறார் சீனத்தூதுவர்
சீனா நரமாமிசத்தை (மனித இறைச்சியை) பதப்படுத்திய மாட்டிறைச்சி என்ற பெயரில் ஆபிரிக்க நாடுகளிடையே விற்பனை செய்து வருவதாக வெளியான தகவல்கள் ஆபிரிக்கர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை இத்தகவலை சாம்பியாவின் சீன தூதுவரான யாங் யொம்மி கடுமையாக மறுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில், சீனநாட்டவர்கள் மனித உடல்களை எடுத்து அவற்றை உப்பு மற்றும் வேறு இரசாயனப் பதார்த்தங்களை கொண்டு சுத்தப்படுத்தி பின்னர் அந்த மனித உடல்களை துண்டு துண்டாக வெட்டி அவற்றைப் பதப்படுத்திய மாட்டிறைச்சி “Corned beef” என்ற பெயரில் ரின்னில் அடைத்து ஆபிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாகவும், குறிப்பாக இந்த இறைச்சி வகைகள் சாம்பியா போன்ற ஆபிரிக்க நாடுகளிலுள்ள சூப்பர் மார்க்கட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் சில தகவல்கள் குறித்த படங்களுடன் தரவேற்றப்பட்டுள்ளன.
அண்மையில் கானாவைச் சேர்ந்த பெண்மணியான பார்பரா அக்கோஷியா அபோக்யேவும் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் ” சீனா தற்பொழுது மனித இறைச்சியை பதப்படுத்திய மாட்டிறைச்சி எனக்கூறி தகரத்தில் அடைத்து ஆபிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது.
இதையிட்டு மக்கள் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும் என சில படங்களை உள்ளடக்கி தனது தளத்தில் தரவேற்றியிருந்தார்.
இச்செய்தியானது பேஸ்புக்கில் 26, 000 இற்கும் மேற்பட்ட தடவைகள் பகிரப்பட்டுள்ளதுடன், இது ஆபிரிக்க மற்றும் சீன மக்களிடையே மிகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் பேஸ்புக் நிர்வாகம் இந்தப்படங்களில் நம்பகத்தன்மை குறைவாக இருப்பதாகவும், இப்படங்கள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளதெனவும் கூறி தனது வலைத்தளத்தில் இச்செய்தியை தடைசெய்திருந்தது.
மேலும் சீன ஊடகமொன்றும் இது சாம்பியாவிலுள்ள உள்ளூர்ப்பத்திரிகையொன்று சீனர்களின் இறைச்சி வர்த்தகத்தை சீர்குலைப்பதற்காக இவ்வாறான வதந்திகளை பரப்புகின்றதென்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட சாம்பியாவுக்கான சீன தூதுவர் யாங் யொம்மி மேற்குறிப்பிட்ட இச் செய்தியை தான் மறுப்பதாகவும், வேண்டுமென்றே இவ்வாறான வதந்திகள் மக்களிடையே பரப்பப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இச்செய்தியில் எவ்வித நம்பகத்தன்மையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஸ்நேனாப்ஸ் என்ற இணையத்தளமொன்றும், இப்படங்களில் எவ்வித நம்பகத்தன்மையும் இல்லையெனவும், இவை EVIL 6 என்ற வீடியோ கேமிலுள்ள கிராபிக்ஸ் செய்யப்பட்ட படங்களே எனவும் குறிப்பிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.