ஆபத்தில் இருப்பவர்களுக்கு 5 நிமிடத்தில் உதவ புதிய செல்போன் செயலி அறிமுகம்
ஆபத்தில் இருப்பவர்களுக்கு ஐந்தே நிமிடங்களில் அவர்களின் இடத்துக்கே பொலிசார் சென்று உதவும் வகையில் புதிய செல்போன் செயலியை மதுரை மாநகர காவல்துறையில்ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
ஆண்ட்ராய்டு போனில் இண்டர்நெட் வசதி இருந்தால் காவல்துறையின் செல்போன் செயலியை பயன்படுத்தி காவல் நிலைய தொலைபேசி எண்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதுகாப்பு கேட்க முடியும்.
இந்த நிலையில் நேற்று இந்த செல்போன் செயலியின் தொழில் நுட்பத்திலேயே புதிய அப்ளிகேசனை மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் அறிமுகம் செய்து வைத்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், முன்பிருந்த செயலியில் இண்டர்நெட் வசதி தேவைப்படுவதால் இண்டர்நெட் வசதி இல்லாத இடங்களில் அந்த செயலியை பயன்படுத்த முடியவில்லை.இதனால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி செயல்பட இண்டர்நெட் வசதி தேவைப்படாது. அதில் இருக்கும் எஸ்ஓஎஸ் என்ற குறியீட்டை அழுத்தினால் 5 நிமிடத்தில், அழைத்தவர்கள் இருப்பிடத்தை பொலிசார் கண்டுபிடித்து அங்கு வந்து காப்பாற்ற உதவி செய்வர்.
இந்த செயலி தனிமையில் இருக்கும் பெண்கள், கல்லூரி, வேலைகளுக்கு செல்லும் பெண்களுக்கு ஆபத்து காலத்தில் பயன்படுத்த வசதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்ய கூகுள் ப்ளே ஸ்டாரில் சென்று “மதுரை சிட்டி பொலிஸ்” (madurai city police) என டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.